ADDED : ஏப் 19, 2024 06:21 AM
பெங்களூரு: அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களை, துணை முதல்வர் சிவகுமார் மிரட்டியதாக கூறி அவர் மீது தேர்தல் ஆணையத்தில், பா.ஜ., புகார் அளித்துள்ளது.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் மோகன் விஸ்வா, முன்னாள் அமைச்சர் அஸ்வத் நாராயணா தலைமையிலான பா.ஜ., குழுவினர், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
பின், அஸ்வத் நாராயணா கூறியதாவது:
ஏதாவது செய்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது, காங்கிரசின் எண்ணமாகும். இதற்காக பல வழிகளை கையாள்கிறது. மக்களுக்கு 'கேரண்டி கார்டுகளை' கொடுத்துள்ளனர். மக்களின் தனிப்பட்ட விபரங்களை பெறுகின்றனர்.
பொய்களை சொல்லி ஓட்டு வாங்க, காங்கிரஸ் முயற்சிக்கிறது. மக்களின் தனிப்பட்ட தகவலை சேகரிப்பது, தேர்தல் நடத்தை விதிமீறலாகும். பிரசாரத்தின் போது மக்களுக்கு சிவகுமார் ஆசை வார்த்தைகள் கூறுகிறார். இவர் மீதும், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரசுக்கு ஓட்டு போடும்படி, அடுக்குமாடி குடியிருப்பு மக்களை சிவகுமார் மிரட்டியுள்ளார். இதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம். பெங்களூரு ரூரல் தொகுதிக்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வேண்டும். இது, தேர்தல் ஆணையத்தில் நாங்கள் அளித்த மூன்றாவது புகாராகும். சிவகுமார், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
நிலத்துக்காக 9 வயது சிறுமியை, சிவகுமார் கடத்தி சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது காங்கிரசின் கலாசாரம். அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது. தேவகவுடாவே குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு சிவகுமார் பதிலளித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
