ADDED : ஜூன் 24, 2024 04:47 AM

ராம்நகர், : ஒக்கலிகர் சமுதாயத்தில் யார் செல்வாக்கான தலைவர் என்ற மற்றொரு போர் துவங்கியுள்ளது. ராம்நகரில் இருந்து தேவகவுடா குடும்பத்தை வெளியேற்ற, துணை முதல்வர் சிவகுமார் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
கர்நாடகாவில் லிங்காயத் - ஒக்கலிகர் சமுதாயத்தில் அதிகளவில் வசித்து வருகின்றனர். லிங்காயத் சமுதாயத்தின் தலைவராக எடியூரப்பாவையும், ஒக்கலிகர் சமுதாயத்தின் தலைவராக தேவகவுடாவையும் மக்கள் விரும்புகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், மாநில தலைவராக உள்ள சிவகுமாருக்கு, முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம், சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கியது. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இதனால் ஒக்கலிகர் சமுதாயத்தினர், காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தாலும், சிவகுமார் மீதான மதிப்பு அதிகரித்தது. ம.ஜ.த., தலைவர் குமாரசாமி மத்திய அமைச்சராகி உள்ளதால், காலியாக உள்ள சென்னபட்டணாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இத்தொகுதியில் முதலில் சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. அவர் மறுத்ததால், இப்போது சிவகுமாரே போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கனகபுரா எம்.எல்.ஏ.,வாக உள்ள சிவகுமார், தேவகவுடா குடும்பத்தை ராம்நகரில் இருந்து விரட்டியடிக்க சென்னபட்டணாவில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர்கள் கெங்கல் ஹனுமந்தையாவும், குமாரசாமியும் இத்தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தான், முதல்வராகினர்.
இங்கு போட்டியிடுவதன் மூலம், நான் தான் முதல்வர் வேட்பாளர் என்ற செய்தியை, தனக்கு எதிரானவர்களுக்கு அனுப்ப சிவகுமார் முயற்சிக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில், ஒக்கலிகர் ஆதிக்கம் செலுத்தும் 65 தொகுதிகளில், காங்கிரஸ் 43லும்; ம.ஜ.த., 14லும்; பா.ஜ., ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன.
லோக்சபா முதல் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளில் 12ல் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஹாசனில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அது, அக்கட்சியின் கவர்ச்சியால் அல்ல என்பது அனைவரும் அறிந்துள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் ராம்நகரில் போட்டியிட்ட நிகில் குமாரசாமி, சென்னபட்டணாவில் போட்டியிட்டால் சுலபமாக கைப்பற்றி விடலாம். வெற்றி பெறும் பட்சத்தில், தேவகவுடா குடும்பத்தை அகற்றிடலாம் என சிவகுமார் நினைக்கிறார்.
என்ன காரணம்?
l சென்னபட்டணா தொகுதி ஆன்மிகபடி தெய்வீக பகுதியில் அமைந்துள்ளது. இங்கு போட்டியிட்டால் ராஜயோகம் கிடைக்கும்
l சென்னபட்டணாவில் வெற்றி பெறுவதன் மூலம், ஒக்கலிகர் சமுதாயத்தில் சக்தி வாய்ந்த தலைவராக இருக்கலாம்
l லோக்சபா தேர்தலில் தனது சகோதரரை குமாரசாமி தோற்கடித்த கோபத்தில் சிவகுமார் உள்ளார். தற்போது பா.ஜ.,வின் யோகேஸ்வரும் சேர்ந்துள்ளதால், சென்னபட்டணாவில் தோல்வி அடைந்தால், தனது அரசியல் எதிர்காலம் இருண்டுவிடும் என கருதுகிறார்
l லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு, கனகபுரா சட்டசபை தொகுதியில் 26,000 ஓட்டுகளும்; சென்னபட்டணாவில் 85,000 ஓட்டுகளும் கிடைத்ததன. இதன் அடிப்படையில் இங்கு போட்டியிட முயற்சிக்கிறார்
l யோகேஸ்வர், காங்கிரசில் இருந்து விலகிய பின், சென்னபட்டணாவில் திறமையான காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. கூட்டணி வேட்பாளர்களை எதிர்கொள்ள, கவர்ச்சியான தலைவர்கள் இல்லாததால், எங்கு நான் போட்டியிட்டால் மீண்டும் தோல்வி அடைந்துவிடுவேனோ என்ற அச்சத்தில், சுரேஷ் உள்ளார்.