எங்களால் பதவியை அனுபவித்தீர்கள் காகேரி மீது சிவராம் ஹெப்பார் காட்டம்
எங்களால் பதவியை அனுபவித்தீர்கள் காகேரி மீது சிவராம் ஹெப்பார் காட்டம்
ADDED : ஏப் 16, 2024 05:57 AM

உத்தரகன்னடா, : ''எங்களின் தியாகத்தால், பதவியை அனுபவித்தீர்கள். யார் என்ன செய்தனர் என்பது, மக்களுக்கு தெரியும், என பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசை கவிழ்த்து, பா.ஜ., ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர்களில் சிவராம் ஹெப்பாரும் ஒருவர். எடியூரப்பா அரசில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். பசவராஜ் பொம்மை அரசிலும் அமைச்சர் பதவி கிடைத்தது.
கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வியடைந்து, ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் உத்தரகன்னடா எல்லாபுரா தொகுதியில் போட்டியிட்ட சிவராம் ஹெப்பார், பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
அதன்பின் சிவராம் ஹெப்பாரின் பார்வை, காங்கிரஸ் மீது திரும்பியது. சில மாதங்களுக்கு முன் நடந்த ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போட்டு, பா.ஜ., தலைவர்களின் கோபத்துக்கு ஆளானார்.
சிவராம் ஹெப்பாரின் மகன் விவேக், சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில் ஹெப்பார் காங்கிரசுக்கு சென்றால், கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ், பா.ஜ., நடவடிக்கை எடுக்கலாம்.
இதற்கு பயந்து மகனை மட்டும், காங்கிரசுக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் பெயரளவில் பா.ஜ.,வில் இருக்கிறார் என தகவல்கள் பரவின.
உத்தரகன்னடா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி போட்டியிடுகிறார். இவருக்கு பிரசாரம் செய்யவும், சிவராம் ஹெப்பார் ஆர்வம் காண்பிக்கவில்லை.
இதனால் எரிச்சலடைந்த காகேரி, சிவராம் ஹெப்பார் வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார் என, குற்றம்சாட்டினார். இது குறித்து, சிவராம் ஹெப்பார் கூறியதாவது:
யார் என்ன செய்கின்றனர் என்பது, அனைவருக்கும் தெரியும். என் தியாகத்தால் காகேரி சபாநாயகர் பதவியை அலங்கரித்தார். நாங்கள் 17 பேர் ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்ததால், எடியூரப்பா நான்காவது முறையாக முதல்வரானார். காகேரிக்கு பதவி கிடைக்கவும், நாங்களே காரணம்.
பசனகவுடா பாட்டீல் எத்னால், என்னை பற்றி விமர்சிக்கிறார். கடந்த ஓராண்டில், எங்களை விட எத்னால் பேச்சால் தான், கட்சிக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு எங்கள் மாவட்டத்தின் அரசியலை பற்றி, எதுவும் தெரியாது. எனவே அவர் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.

