ADDED : மே 20, 2024 09:16 PM

பெங்களூரு: முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா கீழ்த்தரமான மனநிலை கொண்டவர்,'' என ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா பேசும் போது, கண்ணியத்தை மறப்பது புதிய விஷயம் அல்ல.
மற்றவருக்கு கேடு நினைத்து, அவர் பேசிய உரையாடல், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிவராமே கவுடாவின் பேச்சை கேட்ட மக்களுக்கு, அவர் எப்படிப்பட்ட குணம் கொண்ட அரசியல்வாதி என்பது புரிந்திருக்கும்.
சிறந்த முறையில் அரசியல் செய்ய தெரியாதவர். ஒரு முன்னாள் பிரதமரின் இறப்பை விரும்பும் ஈனத்தனமான குணம் கொண்டவர்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, தன் மகனின் நலனை மட்டும் பார்ப்பதாக, சிவராமேகவுடா குற்றம்சாட்டுகிறார். ஆனால் என் தந்தை எந்த காலத்திலும், அப்படி எண்ணவோ, ஆலோசிக்கவோ இல்லை.
மற்றவரை போன்று அவர், உள் ஒப்பந்த அரசியல் செய்திருந்தால், நான் எப்போதோ உயர்ந்த பதவியில் இருந்திருப்பேன். உழைப்பின் மூலம் எனக்கான அடையாளத்தை பெற முயற்சிப்பவன். அவர் அரசியல் செய்யட்டும்; அதற்காக ஈனத்தனமான அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

