காஷ்மீரில் படகு கவிழ்ந்து ஆறு பேர் பலி; பலர் மாயம்
காஷ்மீரில் படகு கவிழ்ந்து ஆறு பேர் பலி; பலர் மாயம்
ADDED : ஏப் 17, 2024 12:58 AM

ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின் ஜீலம் ஆற்றில் குழந்தைகள் உட்பட பலரை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள கந்த்பால் பகுதியைச் சேர்ந்த 19 பேர், நேற்று காலை அங்கிருந்து படகு வாயிலாக பட்வாரா பகுதிச் சென்றனர். அவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்.
பட்வாரா பகுதி அருகே சென்ற போது, ஜீலம் ஆற்றில் வெள்ளப் பெருக்கில் சிக்கி படகு கவிழ்ந்தது.
தகவல் அறிந்த உள்ளூர்வாசிகள், மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தந்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
எஞ்சிய மூவரை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீர் ஐ.ஜி., ஸ்ரீநகர் எஸ்.பி., மற்றும் இணை கமிஷனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை கண்காணித்தனர்.

