ADDED : ஜூலை 21, 2024 07:25 AM
நாகரபாவி: கன்னட சின்னத்திரை இயக்குனர் வினோத் தொண்டலே, வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னட சின்னத்திரை இயக்குனர் வினோத் தொண்டலே, 52. 'கரிமணி' என்ற சின்னத்திரை தொடரை இயக்கி வந்தார்.
இந்த தொடருக்கு மக்களிடமிருந்து வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் இந்த சீரியல், 100வது எபிசோட்டை கடந்தது. இதை கொண்டாடுவதற்கு, கரிமணி சின்னத்திரை குழு ஏற்பாடுகள் செய்து வந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் பெங்களூரு நாகரபாவியில் உள்ள தனது வீட்டில், வினோத் தொண்டலே துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல், விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வினோத் தொண்டலே தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கடன் பிரச்னையால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
கன்னட நடிகர் சதீஷ் நினசம் நடிக்கும் அசோகா பிளேட் என்ற கன்னட திரைப்படத்தை, வினோத் தொண்டலே இயக்கினார்.
இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வினோத் தொண்டலே தற்கொலை செய்திருப்பது தெரிந்துள்ளது. அவரது மறைவுக்கு, கன்னட திரை உலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
வினோத் தொண்டலேவுக்கு, மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.