ADDED : ஆக 08, 2024 10:21 PM

பெங்களூரு : 'மூடா' முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மைசூரில், 'மூடா' எனும் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையம் உள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு மனை ஒதுக்கப்படுகிறது. வீட்டு மனைகளை ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
முதல்வரின் மனைவி பார்வதிக்கும், சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் முதல்வர் மறுக்கிறார். சட்டத்திற்கு உட்பட்டே வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார்.
மூடாவில் நடந்த முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கேட்டு கொண்டாலும், அரசு மறுக்கிறது. இந்நிலையில் மூடாவில் நடந்த முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவுக்கு பங்கு உள்ளது என்றும், அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர் புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி, முதல்வருக்கு, கவர்னர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்று, கர்நாடக அமைச்சரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் கவர்னர் அளித்த நோட்டீசுக்கு, முதல்வர் விளக்கமும் அளித்து உள்ளார்.
இதற்கிடையில் மைசூரை சேர்ந்த இன்னொரு சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா என்பவரும், மூடா முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில், மூடா முறைகேடு தொடர்பாக, சித்தராமையா மீது பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூடா முறைகேட்டை கண்டித்து, எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை நடத்தி அழுத்தம் கொடுக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்திருப்பது, சித்தராமையாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.