சமூக வலைதள பதிவுகளை மற்ற நாடுகளில் நீக்க முடியாது 'எக்ஸ்' நிறுவனம் பதில்
சமூக வலைதள பதிவுகளை மற்ற நாடுகளில் நீக்க முடியாது 'எக்ஸ்' நிறுவனம் பதில்
ADDED : ஆக 08, 2024 01:17 AM
புதுடில்லி, 'பத்திரிகையாளருக்கு எதிரான சமூக வலைதளப் பதிவுகளை இந்தியாவில் நீக்கியுள்ளோம். மற்ற நாடுகளில் நீக்க இயலாது' என, 'எக்ஸ்' நிறுவனம் பதில் அளித்துள்ளது.
தனக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளை, வீடியோக்களை நீக்கக் கோரி, தனியார் 'டிவி'யின் ஆசிரியரான ரஜத் சர்மா டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், அந்த உத்தரவை எக்ஸ் சமூக வலைதளம் நிறைவேற்றவில்லை என, அந்த நிறுவனத்துக்கு எதிராக அவர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, வரும், 22ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், எக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் உள்ள சட்டங்கள், விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறோம். நீதிமன்ற உத்தரவின்படி, பத்திரிகையாளருக்கு எதிரான பதிவுகளை நீக்கியுள்ளோம்.
இந்திய நீதிமன்றங்களின் அதிகாரம், இந்திய எல்லைகளுக்கு உட்பட்டதே. மற்றொரு நாட்டில் உள்ளவர்களை, இந்த உத்தரவுகள் கட்டுப்படுத்தாது.
அதன்படி, நாங்கள் மற்ற நாடுகளில், பத்திரிகையாளர் ரஜத் சர்மா தொடர்பான பதிவுகளை நீக்க முடியாது. அங்குள்ள விதிகளுக்கு உட்பட்டே நாங்கள் செயல்பட முடியும்.
பாகிஸ்தான் அல்லது சீனாவில் உள்ள நீதிமன்றங்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியுமா? அவ்வாறு உத்தரவிட்டால், அது இந்தியாவின் இறையாண்மையை மீறுவதாக இருக்காதா?
அதுபோலவே, மற்ற நாடுகளில் பதிவுகளை நீக்கும்படி உத்தரவிட முடியாது. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.