ஏரிகளில் சோலார் பேனல்கள் திட்டம் 5 மாவட்டங்களில் பணிகள் விறுவிறு
ஏரிகளில் சோலார் பேனல்கள் திட்டம் 5 மாவட்டங்களில் பணிகள் விறுவிறு
ADDED : ஆக 24, 2024 01:59 AM
பெங்களூரு : கர்நாடகாவின் ஏரிகளில் சோலார் பேனல்கள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்ய ஏற்பாடு நடக்கிறது. இதற்காக 40 ஏரிகள் கொண்ட பட்டியலை சிறிய நீர்ப்பாசனத்துறை தயாரித்துள்ளது.
இதுகுறித்து, சிறிய நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மின் உற்பத்திக்கு, மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு தேவையான மின்சாரம் வினியோகிக்கும் நோக்கத்தில் அணைப் பகுதிகள், பெரிய ஏரிகள் உட்பட நீர் நிலைகளில் சோலார் மின் உற்பத்தி செய்வது குறித்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று துறை
சிறிய நீர்ப்பாசன துறை, நீர்ப்பாசனத்துறை, எரிபொருள் மேம்பாட்டு நிறுவனம் ஒருங்கிணைப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மூன்று துறை அதிகாரிகள் ஏற்கனவே ஒரு சுற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர். விரைவில் அடுத்த ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.
இதற்கு முன் நீர்ப்பாசன துறை, சிறிய நீர்ப்பாசனத்துறை சார்பில் சோலார் பேனல்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. மாநிலம் முழுதும், சிறிய நீர்ப்பாசனத்துறை கட்டுப்பாட்டில், 3,683 ஏரிகள் உள்ளன. இவற்றில் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட, ஆண்டு முழுதும் 50 முதல் 60 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ள, 40 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஐந்து மாவட்டங்களில் மட்டும் ஏரிகள் தேர்வு செய்யப்பட்டன. வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களில், சோலார் பேனல் பொருத்த, தகுதியான ஏரிகளை ஆய்வு செய்வோம்.
5,000 மெகாவாட்
சிறிய நீர்ப்பாசன துறையின் 40 ஏரிகளில் சோலார் மின் உற்பத்தி பொருத்துவதால், 10 மாதங்களில் 2,000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அணைகளிலும் சோலார் பேனல்கள் பொருத்தினால், 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
சிறிய நீர்ப்பாசனத்துறை செயல்படுத்தும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு, மின்சாரம் பெற மாதந்தோறும் 10 முதல் 14 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஏரிகளில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வதால், இந்த மின்சாரம் ஏற்ற நீர்ப்பாசன திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

