சோலார் மின் உற்பத்தி திட்டம்; மைசூரில் பெரும் வரவேற்பு
சோலார் மின் உற்பத்தி திட்டம்; மைசூரில் பெரும் வரவேற்பு
ADDED : மே 10, 2024 10:42 PM

மைசூரு : மத்திய அரசின், பி.எம்., சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கு, மைசூரில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று மாதங்களில் 1,500 பேர் திட்டத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
வீடுகளின் மேற்கூரையில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சோலார் பலகைகள் பொருத்துவதற்கு ஆகும் செலவில், மத்திய அரசு 40 சதவீதம் தொகையை வழங்கும்.
வீட்டின் மேற்கூரையில் சோலார் பலகைகள் பொருத்தினால், 20 ஆண்டுகள் வரை மின்சாரம் பெறலாம். இதன் மூலம் 30 முதல் 40 சதவீதம் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
மின் கட்டணம் ஏறுமுகமாக உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு மைசூரில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திட்டம் செயல்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில் 1,500 பேர், தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்த பதிவு செய்து கொண்டுள்ளனர்.
மின்சாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சோலார் பலகைகள் பொருத்த அதிகமான இடம் தேவையில்லை. வீட்டின் மேற்கூரையில் உள்ள காலி இடத்துக்கு தக்கபடி, சோலார் பலகைகள் பொருத்தலாம்.
சாமுண்டீஸ்வரி மின் வினியோக கார்ப்பரேஷன் எல்லைக்கு உட்பட்ட மைசூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதியின் ஐந்து மாவட்டங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீப நாட்களாக மைசூரில் சோலார் மின் உற்பத்தியில், மக்கள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்.
ஒரு வீட்டின் மேற்கூரையில் சோலார் பலகைகள் பொருத்தினால், 1 கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரை சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். 1 கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பலகைகள் பொருத்த, 50,000 முதல் 60,000 ரூபாய் செலவாகும். மத்திய அரசிடம் 30,000 ரூபாய் மானியம் கிடைக்கும்.
மூன்று கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பலகைகள் பொருத்தவும், இதே அளவு மானியம் கிடைக்கும். 10 கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பேனல் பொருத்தினால், 20 சதவீதம் மானியம் கிடைக்கும்.
மக்களிடம் பணம் இல்லையென்றால், வங்கியில் இருந்து கடனாக பெற்று தரப்படும். திட்டத்தின் கீழ், விண்ணப்பம் தாக்கல் செய்த பின், அதிகாரிகள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிடுவர். அதன்பின் 60 சதவீதம் பணம் செலுத்தி, பணிகளை துவக்கலாம்.
சோலார் பலகைகள் பொருத்தப்பட்ட பின், ஐந்து ஆண்டுகள் வரை இலவசமாக நிர்வகிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.