பொதுப்பணி துறை தடையை மீறி அலுவலகத்தை திறந்த சோமண்ணா
பொதுப்பணி துறை தடையை மீறி அலுவலகத்தை திறந்த சோமண்ணா
ADDED : ஆக 18, 2024 11:39 PM

துமகூரு : துமகூரில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, எம்.பி., அலுவலகம் திறக்க அளித்த அனுமதியை, பொதுப்பணி துறை, திரும்ப பெற்றது. ஆனாலும், சொன்னபடி நேற்று அலுவலகத்தை சோமண்ணா திறந்தார்.
துமகூரு லோக்சபா எம்.பி.,யாக சோமண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய ரயில்வே இணை அமைச்சராக பதவியேற்ற பின், துமகூரு மாவட்டத்தில் எம்.பி., அலுவலகம் அமைக்க, அரசிடம் இடம் கேட்டிருந்தார்.
பொதுப்பணி துறையும், துமகூரு நகரில் சர்க்யூட் ஹவுசில் உள்ள 'டிராவலர்ஸ் பங்களா'வை வழங்க ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, இந்த கட்டடம் பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வந்தது. ஆக., 18ம் தேதி (நேற்று) திறக்கவும் நாள் குறிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இங்கு அலுவலகம் திறந்தால், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் அலுவலகம் போன்று மாறிவிடும் என நினைத்த, பொதுப்பணி துறை அதிகாரிகள், அலுவலகம் திறக்க திடீரென தடை விதித்தனர். இதற்கு பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சொன்னபடி நேற்று காலை சர்க்யூட் ஹவுசில் தனது புதிய அலுவலகத்தை, மத்திய அமைச்சர் சோமண்ணா திறந்து வைத்து, பூஜைகள் செய்தார்.
முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்தது தொடர்பாக, ஊடகத்தினர் கேட்ட போது, ''சித்தராமையா, திறமையான அரசியல்வாதி. யாரும் சட்டத்தை விட பெரியவர்கள் அல்ல. அவருக்கே இது தெரியும். சட்டம் தன் கடமையை செய்யும். அவருடன் நெருங்கி பழகி உள்ளேன்,'' என்றார்.
அப்போது அங்கிருந்த அதிகாரியிடம், ''எனது அலுவலகத்தில் முதல்வர் படம் வைக்கும் இடத்தை காலியாக வைக்கவும். புதிய முதல்வரின் படத்தை மாட்ட வேண்டும்,'' என அவர் கூறியபோது, அங்கிருந்த கட்சியினர் சிரித்தனர்.
தன் புதிய அலுவலகத்தை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா திறந்து வைத்தார். இடம்: துமகூரு.

