ADDED : ஏப் 18, 2024 04:08 AM

கதக், : கதக் ஷிரஹட்டி மாகடி கிராமத்தில் வசிப்பவர் அசோக், 65. விவசாயி. கடந்த 6 ம் தேதி குடும்பத்துடன் பக்கத்து ஊரில் வசிக்கும், உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், அசோக் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து 5 லட்சம் ரூபாய், 200 கிராம் நகைகளை திருடி சென்றனர். அசோக் அளித்த புகாரில், ஷிரஹட்டி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின்படி, அசோக்கின் மகள் கணவரான விஜய், 35 என்பவரிடம் விசாரித்த போது, கூட்டாளியான ரவி என்பவருடன் சேர்ந்து, மாமனார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
திருடப்பட்ட பணத்தை பயன்படுத்தி, கோவாவிற்கு சென்று ஜாலியாக இருந்தது தெரிந்தது. இதனால் விஜய், ரவி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 120 கிராம் நகைகள், 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

