காங்கிரசில் இணைய தயாராகும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வின் மகன்
காங்கிரசில் இணைய தயாராகும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வின் மகன்
ADDED : ஏப் 02, 2024 11:10 PM

கார்வார்: எல்லாபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரின் மகன் விவேக், காங்கிரசில் இணைய தயாராகி வருகிறார்.
உத்தர கன்னடாவின் எல்லாபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். 2019ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்து அமைச்சர் ஆனார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவருக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் பா.ஜ.,வில் இருந்து விலகி மீண்டும், காங்கிரசில் இணைய நினைக்கிறார். இதற்காக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரையும் சந்தித்தார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த, ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு போடுவதை தவிர்க்க, தேர்தலை புறக்கணித்தார்.
விளக்கம் கேட்டு பா.ஜ., நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலும் அளித்து உள்ளார். இந்நிலையில் சிவராம் ஹெப்பாரின் மகன் விவேக் ஹெப்பார், அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைய தயாராகி வருகின்றனர்.
சிவராம் ஹெப்பாரும் காங்கிரசில் இணைய நினைக்கிறார். ஆனால் இடைத்தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில், கட்சி மாறுவதில் அவசரம் காட்டாமல் உள்ளார். பா.ஜ.,வில் இருந்து கொண்டே, காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் முடிவில் அவர் உள்ளார் என்று, பா.ஜ., தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

