ADDED : மார் 06, 2025 11:50 PM

பாலக்காடு; மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையை, அடித்துக்கொன்ற மகன்கள் போலீசில் சரணடைந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகளி ஒசத்தியூரைச்சேர்ந்தவர் ஈஸ்வரன், 54, மனநலம் பாதிக்கப்பட்டு, சில ஆண்டுகளாக சிகிச்சையில் உள்ளார். இவரது மனைவி மல்லிகா. இத்தம்பதியரின் மகன்கள் ராஜேஷ் 32, ரஞ்சித் 30, கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, தந்தையின் கொடுமையை தாங்க முடியாமல் ராஜேஷும், ரஞ்சித்தும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததை அறிந்து தப்பியோடிய இருவரும், பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற அகளி போலீசார், ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மன்னார்க்காடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.