ரூ.500 கோடியில் தென் ஆசியாசின் மிக உயரமான ஸ்கைடெக்; கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்
ரூ.500 கோடியில் தென் ஆசியாசின் மிக உயரமான ஸ்கைடெக்; கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்
ADDED : ஆக 23, 2024 12:33 PM

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.500 கோடி செலவில் தென் ஆசியாவின் மிக உயரமான ஸ்கை டெக்கை அமைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையைப் போலவே கர்நாடகாவின் பெங்களூரூவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஸ்கைடெக்
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, 250 மீட்டர் உயரத்திற்கு ஸ்கை டெக் எனப்படும் வானுர கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆசியாவின் முதல்
தென் ஆசியாவின் முதல் உயரமான கட்டிடமாக இது அமைந்துள்ளது. இந்தியாவின் தலைநகர் டில்லியில் உள்ள குதுப்மினார் கட்டிடம் 73 மீட்டர் உயரம் கொண்டது. அதனை விட பெங்களூருவில் அமையவிருக்கும் இந்த ஸ்கை டெக் 3 மடங்கு உயரமானதாகும். அதேபோல, 160 மீட்டர் உயரம் கொண்ட சி.என்.டி.சி., பிரசிடென்சியல் டவர் தான் பெங்களூரூவின் மிக உயரமான கட்டிடமாக இருந்து வருகிறது. தற்போது அந்த சாதனையை இது முறியடிக்க இருக்கிறது.
சவால்கள்
இந்த ஸ்கைடெக் பெங்களூரு நகரின் மத்தியில் அமைக்கவே முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக, நகரின் மையப் பகுதியில் 25 ஏக்கர் நிலத்தை எடுப்பது மிகவும் சவாலானதாகும். அதேபோல, பெங்களூரூவில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான பகுதிகள் நிறைய இருப்பதால், இந்த உயரமான கோபுரத்தை அமைக்க அனுமதி கிடைப்பதில் சந்தேகம்.
மாற்றம்
அதுமட்டுமில்லாமல், பொதுமக்களின் பாதுகாப்பு, ராணுவ விமான நிலையம் உள்ளிட்டவை, இந்த ஸ்கை டெக்கை அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் அற்றவையாக ஆக்கியுள்ளன. எனவே, பெங்களூரூ நகரத்திற்கு வெளியே, இந்த 250 மீட்டர் உயரமுள்ள ஸ்கைடெக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை
அதுமட்டுமில்லாமல், ரூ.1,269 கோடி செலவில் பெங்களூருவில் ஹெப்பல் - சில்க் போர்டு ஜங்சன் வரையில் இரட்டைவழி சுரங்கப்பாதை அமைக்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.