விளையாட்டு பருவமப்பா... சோர்வுகளை களையுமப்பா! தங்கவயலில் இளைஞர்களை தட்டியெழுப்பிய பாடல்
விளையாட்டு பருவமப்பா... சோர்வுகளை களையுமப்பா! தங்கவயலில் இளைஞர்களை தட்டியெழுப்பிய பாடல்
ADDED : செப் 13, 2024 08:08 AM

விளையாட்டு துறையில், மாநிலத்தின் தலைநகரம் என தங்கவயலை கூறும் வகையில், நாட்டுப்புற கிராமிய விளையாட்டுகளான கிளிபட்டை, கில்லி- தாண்டு, கோலி, ஆடு புலி ஆட்டம், சடுகுடு, பல்லாங்குழி, தாயம், பரமபதம் ஆகியவைகள் பொழுதுபோக்கு மட்டுமின்றி, அறிவுத்திறன், உடற் பயிற்சிக்கும் ஏற்ற கலையாக இருந்தது.
நவநாகரிகம் வளர்ச்சி அடைந்து, சர்வதேச விளையாட்டுகளில் ஸ்னுாக்கர், கோல்ப், கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து என அனைத்திலுமே வெற்றிக்கொடி நாட்டிய நகரமாக ஜொலித்து ஜெயித்து காட்டுகிறது.
ஸ்போர்ட்ஸ் கிளப்கள்
தங்கவயலில், கால்பந்து விளையாட சர்வதேச தரத்தில், 'ஜிம்கானா' மைதானத்தை இங்கிலாந்து நாட்டினர் உருவாக்கினர். ஆங்கிலேயர்களுக்கு இணையாக, தங்கச்சுரங்க இந்திய தொழிலாளர்களையும் ஆட வைத்தனர். ஆரம்பத்தில் ஆங்கிலேயர் மட்டுமே பூட்ஸ் அணிந்து விளையாடினர். பின்னர், தங்கவயல் வீரர்களையும் பூட்ஸ் அணிய வைத்து விளையாட வைத்தனர்.
ஜிம்கானா மைதானம் போல, சாம்பியன் ஹை கிரவுண்ட், மாரிகுப்பம் ஹைகிரவுண்ட், ஜர்கி கிரவுண்ட், மலையாளி கிரவுண்ட் ஆகியவற்றை உருவாக்கினர். பகுதி தோறும் விளையாட்டு வீரர்களை உருவாக்க ஸ்போர்ட்ஸ் கிளப்கள் உருவாக்கினர்.
10 ஆண்டு
அதில் கென்னடிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், சாம்பியன் விக்டரி ஸ்போர்ட்ஸ் கிளப், நந்திதுருகம் இன்ஸ்டிடியூட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இது மட்டுமின்றி ஹாக்கி விளையாட்டு, சிறப்பான இடத்தை பிடித்திருந்தது.
இதற்காக உரிகம் பகுதியில், ஹாக்கி மைதானமும் உருவாக்கப்பட்டது. உள் விளையாட்டுகளான டென்னிஸ், கேரம், ஸ்னுாக்கர், செஸ் ஆகியவற்றிலும் தங்கவயல் வீரர்கள் சிறந்து விளங்கினர்.
தங்கவயலில் தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், விளையாட்டு துறையை ஊக்குவிக்க வாய்ப்பு இல்லாமல் போனது. பொதுத்துறை நிறுவனமான பெமல் தொழிற்சாலையிலும் விளையாட்டுக்கு காட்டிய ஆர்வம், 10 ஆண்டுகளாக இல்லாமல் போனது.
'விளையாட்டு பருவமப்பா... சோர்வுகளை களையுமப்பா' என்று தங்கவயலில் இளைஞர்களை தட்டியெழுப்பிய பாடல் இன்றும் ஒலித்து கொண்டுள்ளது.