700 ஏக்கர் ஏரியில் பரந்து கிடக்கும் போனல் பறவைகள் சரணாலயம்
700 ஏக்கர் ஏரியில் பரந்து கிடக்கும் போனல் பறவைகள் சரணாலயம்
ADDED : செப் 01, 2024 11:47 PM

பறவைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுவும் திறந்த வெளியில் அதன் இருப்பிடத்தில் பறவைகளை பார்ப்பதும், குஞ்சுகளுடன் கொஞ்சுவதும், அதன் கீச் கீச் சத்தமும் கேட்டு நம்மை நாமே மறந்து விடுவோம்.
கர்நாடகாவில், மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் தான் மிகவும் பெரியது. அதற்கு அடுத்த நிலையில் இருப்பது போனல் பறவைகள் சரணாலயம். இது, யாத்கிரில் இருந்து, 66 கி.மீ., துாரத்தில் உள்ள சொரபூரில் அமைந்துள்ளது.
போனல் ஏரியில் இந்த சரணாலயம் தானாகவே உருவானது. ஏரியை சுற்றி ராட்சத பாறைகளால் சூழப்பட்டுள்ளது. 17ம் நுாற்றாண்டிலேயே, சொரபூரை ஆட்சி புரிந்த மன்னர் ராஜா பாம் நாயக், போனல் பறவைகள் சரணாலயத்தை உருவாக்கினார்.
சுமார் 700 ஏக்கரில் விரிந்து கிடக்கும் இந்த சராணலயத்தில், செந்நாரை, வெண்கழுத்து நாரை, அமெரிக்கன் வெண் நாரை, கருந்தலை நாரை, கருந்தலை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, வரித்தலை வாத்து, தாழைக்கோழி, பெரிய கொக்கு, குளக் கொக்கு, உண்ணி கொக்கு உட்பட ஏராளமான, வெளிநாட்டு, உள்நாட்டு பறவை இனங்களை காணலாம்.
பறவைகள் சரணாலயத்தை சுற்றி விவசாய நிலங்கள் இருப்பதால், பறவைகளின் தீனிக்கு பஞ்சமில்லை. சுற்றுலா பயணியரின் வசதிக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல், நவம்பர் வரை பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக, சரணாலயத்துக்கு வந்து விடும். இந்தோனேஷியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, கடல் கடந்து வரும். முட்டை இட்டு, குஞ்சு பொறித்த பின்னர் சிறிது காலம் இங்கேயே இருக்கும்.
குஞ்சுகளுக்கு பறக்கவும், இரை தேடவும் கற்று கொடுத்து விட்டு தாய் பறவை பறந்து சென்று விடுமாம். கூட்டம் கூட்டமாக வந்து, செல்லும் என்று கூறப்படுகிறது.
பறவைகள் வரும் காலம் துவங்கி விட்டதால், சுற்றுலா பயணியர் வருகையும் ஆரம்பித்து விட்டது. வார நாட்கள் மட்டுமின்றி, வார இறுதி நாட்களிலும் சரணாலயத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எப்படி செல்வது?
யாத்கிர், கலபுரகியில் இருந்து சொரபூருக்கு பஸ்களில் வந்து, அங்கிருந்து, போனலுக்கு வேறு பஸ்சில் வந்து, பறவைகள் சரணாலயத்தை காணலாம். கலபுரகி, ராய்ச்சூர், யாத்கிருக்கு ரயிலில் வந்து, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். கலபுரகிக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து டாக்சி, பஸ் வாயிலாகவும் செல்லலாம்.
காலையிலேயே வந்து விட்டால், போனல் பறவைகள் சரணாலயத்தை பார்த்து விட்டு, துாங்கும் புத்தர், காவலா குகைகள், பசவசாகர் அணை ஆகியவற்றை பார்த்து விட்டு, மாலையில் புறப்பட வசதியாக இருக்கும். இதற்கு சொந்த வாகனத்தில் வந்தால் தான் வசதியாக இருக்கும்
- நமது நிருபர் -.