தமிழர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர் உறுதி
தமிழர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர் உறுதி
ADDED : நவ 11, 2024 10:57 AM

கொழும்பு: 'அரசு துறையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்' என இலங்கை அதிபர் அனுரா திசநாயகே உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதையொட்டி யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அதிபர் அனுரா திசநாயகே கூறியதாவது: அதிபர் தேர்தலில் யாழப்பாணத்தில் எனக்கு 27 ஆயிரம் பேர் மட்டுமே ஓட்டளித்தனர். காரணம், நாங்கள் அப்போது இந்த பகுதிகளில் எங்கள் வாக்குறுதிகள் பற்றி அதிகம் பிரசாரம் செய்யவில்லை. ஆனாலும், இப்போது எங்கள் மீது நம்பிக்கை வைத்து நிறையப்பேர் இந்த கூட்டத்துக்கு வந்துள்ளதற்கு நன்றி.நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் சமமாக மதிக்கப்படுவதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்துவோம். உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இலங்கை அரசு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் அனைத்தும் அவரவருக்கே திரும்ப ஒப்படைக்கப்படும்.இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்குப் பகுதியில் உள்ள கடல் வளங்களை இந்திய மீனவர்கள் அழித்து வருகின்றனர். கடல் வளங்களைச் சுரண்டுவது நடக்காமல் இருப்பதையும், இலங்கை மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதையும் அரசு உறுதி செய்யும்.
முழு சுதந்திரம்
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அரசு தமிழர்களின் முழு சுதந்திரத்தை உறுதி செய்யும். இது குறித்து பாதுகாப்பு துறையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும். சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதில் அரசு கவனம் செலுத்தும். இந்த பகுதியில் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இலங்கையின் வட பகுதியில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதற்கு அரசியல்வாதிகள் காரணம். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
128 மீனவர்கள், 199 படகுகள்
இலங்கைக் கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி, நேற்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை பின்னணியாகக் கொண்டு இலங்கை அதிபர் அனுரா திசநாயகே பேச்சு அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்டோபர் 23ம் தேதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின், 128 மீனவர்களும், 199 படகுகளும் இலங்கைக் காவலில் உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.