ADDED : செப் 17, 2024 04:13 AM

துளு நாட்டில் 10ம் நுாற்றாண்டில், அலுப வம்சத்தின் மன்னர் குந்தவர்மா ஆட்சி செய்து வந்தார். இவரின் ராஜ்யத்தில் மங்களூரு தலைநகராக இருந்தது.
முனிவர்கள் வருகை
அப்போது நேபாளத்தில் இருந்து மச்சேந்திரநாதர், கோரநாதர் என இரு முனிவர்கள் வந்தனர். நேத்ராவதி ஆற்றை கடந்து, மங்களாபுரத்தை அடைந்தனர். அவர்கள் ஆற்றை கடந்த இடம், 'கோரக்தண்டு' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில், கபில முனிவரின் இருப்பிடமாகவும், கல்வி மையமாகவும் இருந்ததை உணர்ந்த இரு முனிவர்களும் அங்கேயே தங்கினர்.
இதையறிந்த மன்னர் குந்தவர்மா, முனிவர்களை சந்திக்க வந்தார். துளு நாட்டின் அரசன் நான், என்று அறிமுகப்படுத்தி கொண்டு, மரியாதை செலுத்தினார்.
மன்னரின் பணிவு, நற்பண்புகளால் மகிழ்ச்சியடைந்த முனிவர்கள், அவரது ராஜ்யம் ஒரு புனிதமான இடம் என்பதையும், கடந்த காலத்தில் புனித துறவிகள், முனிவர்களின் நடவடிக்கைகளால் அது புனிதமானது என்பதையும் தெரியப்படுத்தினர்.
தங்கள் மத நடவடிக்கைகளின் மையம் அமைக்க, நிலம் வழங்குமாறு மன்னரிடம் துறவிகள் கேட்டனர். அவரும் அனுமதித்தார்.
முனிவர்கள் தெரிவித்த கருத்தின்படி, தான் ஆட்சி செய்யும் நாட்டில், அன்னை மங்களா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இருந்ததை அறிந்து ஆச்சரியம் அடைந்தார். முனிவர்களிடம், விகாசினி, அந்தாசுரன் மற்றும் பரசுராமரால் கட்டப்பட்ட மங்களா தேவி ஆலயத்தின் வரலாறை கேட்டறிந்தார்.
வரலாறு நிகழ்வுகள் நடந்த இடத்துக்கு மன்னரை அழைத்து சென்றனர். குறிப்பிட்ட இடத்தை தோண்டுமாறு முனிவர்கள் கேட்டு கொண்டனர். மன்னரின் உத்தரவுப்படி, அப்பகுதியில் தோண்டிய போது, மங்களாதேவியின் அடையாளமான லிங்கத்தையும், தாராபாத்திரத்தையும் மீட்டு, பாதுகாப்பாக நிறுவுமாறு மன்னரிடம் கேட்டு கொண்டனர்.
குந்தவர்மாவும், இரு முனிவர்களின் ஆலோசனையை நிறைவேற்றினார். புண்ணிய பூமியில் மங்களாதேவியின் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டது.
வேண்டுதல் நிவர்த்தி
அன்னை மங்களா தேவி, குறிப்பாக கன்னிப் பெண்களுக்கு சிறப்பு உபகாரம் செய்ததால், இக்கோவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
மங்களாதர விரதம் இருந்து, தேவியை வழிபடும் கன்னியர், தங்கள் விருப்பப்படி, பொருத்தமான வாழ்க்கை துணை பெறுகின்றனர்.
இன்றும் கத்ரி கோவில் திருவிழாவின் போது, முதல் நாளில் கத்ரி யோகிராஜ் மடத்தின் தலைவர்கள், மங்களா தேவி கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பூஜை மற்றும் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வருகின்றனர்.
நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
நவராத்திரி நிறைவு நாளில் நடக்கும் ரத உற்சவத்தை காண, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஆண்கள் பேன்ட் அணிந்திருக்க வேண்டும்; பெண்கள் தோள், முழங்காலை மறைத்த ஆடைகளை அணிய வேண்டும்.
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு டாக்சி, ஆட்டோவில் செல்லலாம்.
ரயிலில் செல்வோர், மங்களூரு மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது டாக்சியில் செல்லலாம். பஸ்சில் செல்வோர் மங்களூரு பஸ் நிலையத்தில் இறங்கி டாக்சி, ஆட்டோவில் செல்லலாம்.
� மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மங்களாதேவி. �ஸ்ரீமங்களா தேவி கோவில்.
கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் 9:30 மணி வரையிலும்; 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். மேலும் விபரங்களுக்கு, 0824 - 2415 476 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஆண்கள் பேன்ட் அணிந்திருக்க வேண்டும்; பெண்கள் தோள், முழங்காலை மறைத்த ஆடைகளை அணிய வேண்டும்.
- நமது நிருபர் -