ADDED : ஆக 19, 2024 10:40 PM

வரலாற்று பிரசித்தி பெற்ற சிருங்கேரி கோவிலில் குடி கொண்டுள்ள சாரதாம்பா, கல்விக்கடவுளாக போற்றப்படுகிறார். பிள்ளைகளுக்கு சரியாக படிப்பு வராவிட்டால், இங்கு அழைத்து வந்து பூஜை செய்கின்றனர்.
சிக்கமகளூரின் சிருங்கேரி மடமும், சாரதாம்பா கோவிலும் கர்நாடகாவின் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக விளங்குகிறது. 1,200 ஆண்டு வரலாறு கொண்டது என, அனைவருக்கும் தெரியும். நவ துர்க்கையின் முக்கியமான அவதாரங்களில், சிருங்கேரி சாரதாம்பாவும் ஒன்றாவார். சிருங்கேரி மடத்தையும், கோவிலையும் ஆதி சங்கராச்சார்யா கட்டியதாக ஐதீகம்.
விஜயநகர அரசர்கள் காலத்தில், சிருங்கேரி கோவிலில் சம்பிரதாயப்படி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. கோவிலின் சொத்துகளும் அதிகரித்தது. அதன்பின் மைசூரு உடையார் வம்சத்தினர், அதே சம்பிரதாயத்தை தொடர்ந்தனர். முஸ்லிம் சமுதாய மன்னர்களும் கூட, சிருங்கேரி கோவிலுக்கு காணிக்கைகள் வழங்கியதற்கான ஆவணங்கள் உள்ளன.
விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர்கள், இங்கு நவராத்திரி பூஜை செய்யும் சம்பிரதாயத்தை ஆரம்பித்து வைத்தனர். அதன்பின் மைசூரு உடையாரும் தொடர்ந்தார்.
சிருங்கேரியில் குடிகொண்டுள்ள சாரதாம்பா, கல்விக்கடவுளாக போற்றப்படுகிறார். படிப்பு சரியாத வராத சிறார்களை, இங்கு அழைத்து வந்து சாரதாம்பாவை தரிசிக்க வைத்து, சிறப்பு பூஜைகள் செய்தால் நன்றாக படிப்பு வரும் என்பது ஐதீகம்.
பள்ளியில் சேர்ப்பதற்கு முன், பெற்றோர் தங்களின் பிள்ளைகளை சிருங்கேரிக்கு அழைத்து வந்து, பூஜைகள் செய்வது வழக்கம்.
கோவிலின் சிறப்பை கேள்விப்பட்டு, கர்நாடகா மட்டுமின்றி, வெளிமாநிலம், நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்தியாவின் முக்கியமான புண்ணிய தலங்களில், சிக்கமகளூரின் சிருங்கேரியும் ஒன்றாகும். சிக்கமகளூரில் இருந்து 85 கி.மீ., தொலைவில், சிருங்கேரி உள்ளது. பாளே ஹொன்னுார், கலசா, கொட்டிகேஹாரா வழியாக சிருங்கேரிக்கு வரலாம்.
பஸ் வசதி, ரயில் வசதி ஏராளம். தனியார் வாகன வசதியும் உள்ளது. போக்குவரத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை.
தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அர்ச்சனை, அபிஷேகங்கள் நடக்கின்றன. காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை சாரதாம்பாவை தரிசிக்கலாம்.
- நமது நிருபர் -