ADDED : டிச 06, 2024 06:38 AM

இந்தியர்கள், கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் நேசிக்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது. குறிப்பாக கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளம்.
பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கட்- அவுட்டுகள் வைக்கின்றனர்.
கால்பந்து ரசிகர்களுக்கு தங்களது பிள்ளைகளையும், கால்பந்து வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால் சிறு வயதிலேயே விளையாட ஊக்குவிக்கின்றனர்.
தமிழர்கள் பகுதி
இந்நிலையில், பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து கால்பந்து வீரராக உருவாகியுள்ள ஒருவரை பற்றி பார்க்கலாம். பெங்களூரு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் விக்னேஷ், 26. கடந்த 1998 மார்ச் 5ம் தேதி பிறந்தவர். சிறுவயதில் இருந்து கால்பந்து விளையாடுவதில் விக்னேஷுக்கு ஆர்வம் அதிகம்.
நண்பர்களுடன் சேர்ந்து எந்த நேரம் பார்த்தாலும் கால்பந்து விளையாடிக் கொண்டே இருப்பார். இதற்கு முக்கிய காரணம், விக்னேஷின் மாமா சண்முகம் வெங்கடேஷ் தான். அவரும் விளையாட்டு வீரர் தான்.
ஓசோன் அகாடமியில் சேர்ந்து தனது விளையாட்டை மெருகேற்ற ஆரம்பித்தார். பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் கடந்த 2018ல் இந்திய அணிக்கு தேர்வு எடுக்கப்பட்டார்.
அந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி மாலத்தீவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். போட்டியில் இந்தியா 2 -- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஒப்பந்தம்
டிசம்பர் 2020ல், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பான கோலடித்தார். அந்தப் போட்டியில் மும்பை 2- - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கடந்த 2023ம் ஆண்டு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாத் அணிக்கு சென்றார். பின், ஒடிசா அணியில் இணைந்தார். தற்போது சென்னையின் எப்.சி., அணிக்காக விளையாடுகிறார்.
இதுவரை இந்தியா, இந்தியன் சூப்பர் லீக்ஸ் அணிகளுக்காக 90க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளார். சில கோல்களையும் அடித்துள்ளார். இளைஞரான இவர் இன்னும் கால்பந்து விளையாட்டு போட்டிகளில் நிறைய சாதிக்கும் ஆர்வத்தில் உள்ளார்
-- நமது நிருபர் --.