கையில் கைதிகளுக்கான முத்திரை: ஹேமந்த் சோரன் பரபரப்பு தகவல்
கையில் கைதிகளுக்கான முத்திரை: ஹேமந்த் சோரன் பரபரப்பு தகவல்
ADDED : ஆக 10, 2024 11:43 PM

ராஞ்சி: சிறையில் இருந்து வெளியே வந்தபோது, சிறை அதிகாரிகளால், தன் கையில், 'கைதி' என முத்திரை குத்தப்பட்டதை, தன் பிறந்த நாளன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார்.
ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், நேற்று தன், 49வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நில அபகரிப்பு மோசடியில் நடந்த பணப் பரிமாற்ற வழக்கில் ஜாமின் கிடைத்ததை அடுத்து, 150 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின், ஜூன் 28ல், ராஞ்சியில் உள்ள சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்தார். இதன்பின், ஜார்க்கண்ட் முதல்வராக அவர் மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில், ராஞ்சி சிறையில் இருந்து வெளியே வந்தபோது, தன் கையில், சிறை அதிகாரிகளால் கைதி முத்திரை குத்தப்பட்டதை, முதல்வர் ஹேமந்த் சோரன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு:
என் பிறந்த நாளான இன்று, கடந்த ஓராண்டு நினைவுகள் என் இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டன. அதுதான் இந்த கைதியின் முத்திரை.
நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, சிறை அதிகாரிகள் என் கையில் இந்த முத்திரையை குத்தினர். இந்த முத்திரை, என்னுடையது மட்டுமல்ல; நம் ஜனநாயகத்தின் தற்போதைய சவால்களின் சின்னம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், 150 நாட்கள் சிறையில் அடைக்க முடியும் என்றால், சாதாரண மக்கள் சந்திக்கும் துயரங்களை நான் சொல்லத் தேவையில்லை.
அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன். ஆனால் இந்த பாதை அவ்வளவு எளிதாக இருக்காது.
இவ்வாறு அவர் பதிவிட்டார்.