மாநில அமைச்சர் கனவில் துக்காராம் எம்.பி., பதவி ராஜினாமாவுக்கு தயக்கம்
மாநில அமைச்சர் கனவில் துக்காராம் எம்.பி., பதவி ராஜினாமாவுக்கு தயக்கம்
ADDED : ஜூன் 10, 2024 04:55 AM

பெங்களூரு : பல்லாரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற துக்காராம், இப்போது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் தவிக்கிறார். இதற்கு அமைச்சர் பதவி ஆசையே காரணம்.
லோக்சபா தேர்தலில் பல்லாரி தொகுதியில் முன்னாள் எம்.பி., உக்ரப்பா உட்பட பலர் காங்கிரஸ் சீட் எதிர்பார்த்தனர். இம்முறை அதிக தொகுதியை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்திருந்ததால், வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளரை களமிறக்க மேலிடம் விரும்பியது. அமைச்சர் நாகேந்திராவை களமிறங்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அவர் சம்மதிக்கவில்லை.
எனவே பல்லாரியின், சண்டூர் எம்.எல்.ஏ., துக்காராமை களமிறக்கும்படி கூறியது. 'எனக்கு போட்டியிட விருப்பம் இல்லை. என் மகளுக்கு சீட் தாருங்கள்' என, கேட்டார். ஆனால் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், துக்காராமை போட்டியிடும்படி பலவந்தப்படுத்தினர். ஒருவேளை தேர்தலில் தோற்றால், தன்னை அமைச்சராக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், துக்காராம் களமிறங்கியதாக கூறப்படுகிறது.
அரை மனதுடன் போட்டியிட்ட, அவர் வெற்றி பெற்றார். எம்.பி.,யாக தேசிய அரசியலுக்கு சென்றால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவருக்கு ராஜினாமா செய்ய மனம் இல்லை. இந்த விஷயத்தில் அவர் குழப்பம் அடைந்து உள்ளார்.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் 187 கோடி ரூபாயை, சட்டவிரோதமாக வேறு கணக்குக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேட்டில் அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரால் காலியான அமைச்சர் பதவி மீது, துக்காராமின் பார்வை பதிந்துள்ளது.
இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எஸ்.டி., சமுதாயத்தினர். தற்போது நாகேந்திரா பதவியை இழந்ததால், தனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என, துக்காராம் எதிர்பார்க்கிறார்.
எம்.பி., யானாலும், அமைச்சர் பதவி மீதான ஆசை போகவில்லை. முதல்வரை சந்தித்து, தன்னை அமைச்சராக்கும்படி வேண்டுகோள் விடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
ஒரு வேளை இவரது வேண்டுகோளை, காங்., மேலிடம் ஏற்றால் துக்காராம் அமைச்சராவார். பல்லாரி எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார். இந்த தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், இவரது மகள் சவுபர்ணிகாவுக்கு சீட் கேட்பார் என தெரிகிறது.

