ஸ்டேஷன் மாஸ்டர் கொர்... : அரைமணி நேரம் காத்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில்
ஸ்டேஷன் மாஸ்டர் கொர்... : அரைமணி நேரம் காத்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில்
ADDED : மே 05, 2024 08:47 PM

ஆக்ரா : உ.பி.யில் எட்டவா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கியதால் சிக்னல் கிடைக்காமல் அரைமணிநேரம் எக்ஸ்பிரஸ் ரயில் காத்திருந்தது.
உ.பி.,மாநிலம் ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்டது எட்டாவா ரயில்வே ஸ்டேஷன் இங்கு உள்ள ரயில்வே ஸ்டேஷன் சிறியதாக இருந்தாலும் முக்கியமானது . காரணம் என்னவென்றால் ஆக்ரா மற்றும் ஜான்சியிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் ரயில்கள் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த ஸ்டேஷனை கடந்து செல்கின்றன. இதனால் ரயில்களுக்கான சிக்னல்களை மாற்றுவது முக்கியமானதாக இருந்து வருகிறது.
சம்பவத்தன்று (மே.,3-ம் தேதி) ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஸ்டேஷன் வழியாக சென்ற பாட்னா-கோட்டா எக்ஸ்பிரஸ் ரயில் கிரீன் சிக்னல்-க்காக அரை மணி நேரமாக நின்றிருந்தது. மேலும் ரயிலின் லோகோ பைலட், தூங்கி கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரை எழுப்புவதற்காக பலமுறை ஹாரன் அடித்து எழுப்பி உள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஆக்ரா டிவிஷனல் அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. தொடர்ந்து ஸ்டேஷன் மாஸ்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸை பெற்றுக்கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர் தவறை ஒப்புக்கொண்டார் மேலும் தன்னுடன் அன்றைய தினத்தில் பணியில் இருந்த பாயின்ட்ஸ்மேன் தட ஆய்வுக்கு சென்றதால் தனியாக இருந்ததால் தூங்க நேரிட்டது என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ரா ரயில்வே டிவிஷன் பி.ஆர்.ஓ., பிரஷாஸ்தி ஸ்ரீ வஸ்தவா கூறுகையில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
டிவிஷனல் ரயி்ல்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் அகர்வாலின் நடவடிக்கை, ஊழியர்கள் நேரம் தவறாமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது 90 சதவீதம் வரையில் நேரம் தவறாமையை அடைய முடிகிறது. இருப்பினும் ஸ்டேஷன் மாஸ்டரின் கடமை மீறல் ரயில் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.