சித்தராமையா உத்தரவை மீறி இயங்கிய இரும்பு தொழிற்சாலை
சித்தராமையா உத்தரவை மீறி இயங்கிய இரும்பு தொழிற்சாலை
ADDED : மார் 05, 2025 11:13 PM

கொப்பால்: கொப்பாலில் இரும்பு தொழிற்சாலை பணிகளை நிறுத்தும்படி முதல்வர் சித்தராமையா உத்தரவிட்ட பிறகும், தொழிற்சாலையில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொப்பால் ஹலவர்த்தி தொழிற்பேட்டையில் பால்டோட்டா என்ற நிறுவனம் இரும்பு தொழிற்சாலை அமைத்து வருகிறது. தொழிற்சாலை செயல்பட துவங்கினால், அதிலிருந்து வெளியாகும் துாசி, புகையால் தங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அத்துடன், விவசாய நிலங்களும் பாதிப்பு அடையுமென மக்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
கலெக்டர் நளின் அதுலிடம் பல முறை மனுவும் கொடுத்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 24ம் தேதி தொழிற்சாலைக்கு எதிராக கொப்பாலில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
நேற்று முன்தினம் பெங்களூரு காவேரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவை, கொப்பால் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பினர் சந்தித்துப் பேசினர். தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறினர்.
பின், கலெக்டர் நளின் அதுலிடம் மொபைல் போனில் பேசிய சித்தராமையா, “தொழிற்சாலை பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுங்கள்,” என்று உத்தர விட்டார்.
ஆனால் இந்த உத்தரவை மீறி, தொழிற்சாலையில், நேற்று பணிகள் தொடர்ந்து நடந்தன. தொழிற்சாலையின் நுழைவுவாயில் பகுதியில் மண் கொட்டி சீரமைக்கும் பணிகள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இதுபற்றி அறிந்த மக்கள் தோழன் என்ற அமைப்பினர், தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தொழிற்சாலை தரப்பு எதிர்ப்புத் தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
முதல்வரின் உத்தரவை மீறிய, கலெக்டர் நளின் அதுலை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்துள்ளது.