வாக்குறுதி திட்டங்களை நிறுத்துங்கள்! தோல்வியால் காங்., வேட்பாளர் விரக்தி
வாக்குறுதி திட்டங்களை நிறுத்துங்கள்! தோல்வியால் காங்., வேட்பாளர் விரக்தி
ADDED : ஜூன் 09, 2024 02:26 AM

மைசூரு : ''லோக்சபா தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, மக்களுக்கு விருப்பம் இல்லை என்று தானே அர்த்தம். எனவே, வாக்குறுதித் திட்டங்களை நிறுத்த வேண்டும். இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா, மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, மைசூரு காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில், மைசூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லட்சுமண், தோல்வி அடைந்தார். இவர், முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய நண்பர்.
முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே, அவரது நண்பர் தோல்வி அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விருப்பமில்லாத மக்கள்
இதுகுறித்து, மைசூரில் லட்சுமண், நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் வழங்கி வரும் வாக்குறுதித் திட்டங்களுக்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர். தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, மக்களுக்கு விருப்பம் இல்லை என்று தானே அர்த்தம்.
எனவே, வாக்குறுதித் திட்டங்களை நிறுத்த வேண்டும். இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
திட்டங்கள் பெறுவோரில், 70 சதவீதம் பயனாளிகள், மேல் வர்க்கத்தை சேர்ந்த மக்கள். மாதம் 25,000 ரூபாய் சம்பளம் வாங்குவோருக்கு, இலவச மின்சாரம் ஏன் வழங்க வேண்டும்?
ஆனாலும், வாக்குறுதித் திட்டங்களால், வாழ்க்கை நடத்தும் ஏழைகளும் உள்ளனர்.
அத்தகையோருக்கு மட்டுமே திட்டம் வழங்கலாம். ஹுன்சூரின் பல கிராமங்களில், நான் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிகமாக உள்ளனர்.
முதல்வருக்கு அவமானம்
அங்குள்ள ஓட்டுச்சாவடிகளில், பா.ஜ., வேட்பாளருக்கு 600க்கும் அதிகமாகவும், எனக்கு 3, 4 எனவும் ஓட்டளித்துள்ளனர். என்னை தோல்வியடைய செய்யுங்கள்; பரவாயில்லை. ஆனால், சித்தராமையா என்ன தவறு செய்தார்?
சொந்த மாவட்டத்திலேயே இன்னும் எத்தனை முறை அவமானப்படுத்துவீர்கள்? இந்த அளவுக்கு துன்புறுத்தும் சுவாபம் இருந்தால் எப்படி?
பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, 5 ரூபாயாவது கொடுத்தாரா? ஆனால், சித்தராமையா பல வளர்ச்சி பணிகளை மைசூருக்கு செய்துள்ளார்.
ஜெயதேவா இதய மருத்துவமனை மைசூரில் திறந்துள்ளார். சித்தராமையா போன்ற துாய்மையான அடையாளம் கொண்ட முதல்வர், நம் நாட்டில் எங்கேயாவது உள்ளனரா? அவர் எதையும் வெளியே சொல்லிக் கொள்ள மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களுக்கு வாக்குறுதித் திட்டங்கள் சென்றுள்ளன. எந்த காரணத்துக்கும் திட்டங்கள் நிறுத்தப்படாது. அரசியல் காரணத்துக்காக திட்டங்கள் அமல்படுத்தவில்லை. நகரப் பகுதியில் தேவையா என்பது தெரியவில்லை.
பரமேஸ்வர்,
அமைச்சர்,
உள்துறை