ADDED : ஜூலை 11, 2026 04:00 PM
அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ., கூட்டணிக்கு வெளியேயும் ஆதரவை திரட்ட திட்டம்
– நமது சிறப்பு நிருபர் –
பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவை எட்ட கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவையும் பெறும் முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ல் துவங்கி, ஆக., 13 வரை நடக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., 240 இடங்களில் மட்டுமே வென்றதால் தனிப்பெரும்பான்மையை இழந்தது. எனினும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் ஆதரவுடன், பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானார்.
தனிப்பெரும்பான்மை இல்லாததால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்ப வேண்டிய நிலை பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெறுவது அவசியம்.
லோக்சபா
லோக்சபாவின் மொத்த பலம் 543. அதில் தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., 240; தெலுங்கு தேசம் – 16; ஐக்கிய ஜனதா தளம் – 12; சிவசேனா – 7; லோக் ஜனசக்தி – 5; மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜனசேனா, ராஷ்ட்ரீய லோக் தளம் – தலா 2; இதர சிறிய கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை எம்.பி., என, 293 எம்.பி.,க்கள் இருந்தனர்.
உத்தவ் தாக்கரேயின் உத்தவ் சிவசேனா கட்சியில் இருந்து விலகிய ஆறு எம்.பி.,க்கள், மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கு தாவினர். மேலும், மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, 20 அதிருப்தி எம்.பி.,க்கள் தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தே.ஜ., கூட்டணிக்கு லோக்சபாவில் பலம், 319 ஆக உயர்ந்துள்ளது. எனினும், மூன்றில் இரு பங்கு ஆதரவை எட்ட இன்னும், 43 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, லோக்சபாவில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற, 362 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ராஜ்யசபாவில், 163 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதன் தாக்கம், கடந்த ஏப்ரலில் தொகுதி மறுவரையறைக்காக அரசியலமைப்பின், 131வது திருத்த மசோதா மீதான ஓட்டெடுப்பில் வெளிப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக, 298 எம்.பி.,க்களும், 230 பேர் எதிராகவும் ஓட்டளித்தனர். பெரும்பான்மை கிடைக்காததால், அந்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராஜ்யசபா
ராஜ்யசபாவில் தற்போது, 245 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மூன்று இடங்கள் காலியாக உள்ளன. மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 24ல் இடைத்தேர்தல் நடக்கிறது. திரிணமுல் காங்., முன்னாள் உறுப்பினர்களான சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ், பிரகாஷ் சிக் பராயிக் ஆகியோர் பா.ஜ., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மற்றும் சமீபத்தில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக மாறிய ஏழு ஆம் ஆத்மி எம்.பி.,க்களுடன் சேர்த்து, பா.ஜ.,வின் பலம், 117 ஆக உயரும். கூட்டணி கட்சிகளை சேர்த்தால் தே.ஜ., கூட்டணிக்கு, 140 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவிநீக்கம் செய்யும் மசோதா, ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா உள்ளிட்டவற்றை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதாக்களை நிறைவேற்ற, கருத்தியல் ரீதியாக எதிர் அணியில் உள்ள கட்சிகளின் ஆதரவையும் நாட பா.ஜ., திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், தலா நான்கு உறுப்பினர்களுடன் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. அதே போல், தமிழகத்தில் ஆட்சியை இழந்து, காங்., உடனான கூட்டணியை முறித்துள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க.,வின் ஆதரவை பெறவும் முயற்சி நடக்கிறது. குறிப்பிட்ட விவகாரங்களில் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க தி.மு.க.,வின் ஒரு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளாக பா.ஜ., கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த தி.மு.க., 1999 – 2004 வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இதே போல், பிற கட்சிகளிடம் ஆதரவை கோர மத்திய அமைச்சர்கள் திரைமறைவில் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
