மாண்டியா பா.ஜ.,வை வளைக்க வியூகம்; ஆயத்தமாகும் 'மாஜி' எம்.பி., சுமலதா
மாண்டியா பா.ஜ.,வை வளைக்க வியூகம்; ஆயத்தமாகும் 'மாஜி' எம்.பி., சுமலதா
ADDED : செப் 10, 2024 11:29 PM

மாண்டியாவின் ம.ஜ.த., -- எம்.பி.,யாக குமாரசாமி இருந்தாலும், இங்கு பா.ஜ.,வை தன் கட்டுப்பாட்டில் வைக்க, முன்னாள் எம்.பி., சுமலதா ஆயத்தமாகி வருகிறார்.
கர்நாடகாவின் பழைய மைசூரு பகுதிகளான மைசூரு, சாம்ராஜ் நகர், மாண்டியா, ஹாசன், சிக்கமகளூரு மாவட்டங்களில், ம.ஜ.த.,வுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
குட்டிகரணம்
இங்கு காலுான்ற பா.ஜ., காங்கிரஸ் பல குட்டிகரணங்கள் அடித்தும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடிவதில்லை.
ஆனால், காங்கிரசில் இருந்த மறைந்த நடிகர் அம்பரிஷ், மாண்டியா தொகுதி எம்.பி.,யானார். அதன்பின், பழைய மைசூரு பகுதியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் நினைத்தது.
அவரின் மறைவுக்கு பின், காங்கிரசில் சுமலதா இணைவார் என கருதப்பட்டது.
ஆனால், 2019 லோக்சபா தேர்தலில் அவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, பா.ஜ., தனது வேட்பாளரை களமிறக்கவில்லை. அதே வேளையில், ம.ஜ.த., - காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நிகில் குமாரசாமி, தோல்வி அடைந்தார். சுமலதா அமோக வெற்றி பெற்று, எம்.பி.,யானார்.
கடந்த 2023ல் அரசியல் மாற்றங்களால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தன. கடந்தாண்டு நடந்த உள்ளாட்சி, இடைத்தேர்தல், ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தது. ராஜ்யசபா உட்பட பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக சுமலதா செயல்பட்டார்.
இதனால் நடப்பாண்டு சுமலதா, பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு மாண்டியா தொகுதி ஒதுக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால், கூட்டணி ஒப்பந்தப்படி, இத்தொகுதி குமாரசாமிக்கு கொடுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியில் இருந்ததால், குமாரசாமிக்கு ஆதரவாக சுமலதா பிரசாரம் கூட செய்யவில்லை.
புதிய அத்தியாயம்
தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்றாலும், பா.ஜ.,வை பலப்படுத்த சுமலதா முடிவு செய்துள்ளார். சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், மாண்டியாவில் பா.ஜ., மூன்றாவது இடத்தையே பிடிக்கிறது.
மாண்டியாவில் பா.ஜ., பலவீனமாக இருப்பதை உணர்ந்த சுமலதா, தனது உள்ளூர் ஆதரவை பயன்படுத்தி, கட்சியின் அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளார்.
எந்தெந்த இடங்களில் பா.ஜ., பலவீனமாக உள்ளது என்பதை கண்டறிந்து, அப்பகுதியில் வலுவான தலைவர்களை, நிர்வாகிகளாக நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால், இப்போதே மாண்டியா முழுதும் பா.ஜ.,வின் முக்கிய பதவிகளில், தனக்கு ஆதரவான நபர்களை நியமிக்க காய் நகர்த்தி வருகிறார்.
இதன் வாயிலாக, அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் மீண்டும் சீட் வாங்கி வெற்றி பெற வேண்டும் என்பது இவரது வியூகமாக உள்ளது.
இவரது முயற்சிக்கு, பாரம்பரிய பா.ஜ.,வினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருவர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- நமது நிருபர் -