குடும்பத்துடன் ஏட்டுகள் போராட்டம் உயர் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
குடும்பத்துடன் ஏட்டுகள் போராட்டம் உயர் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
ADDED : மே 12, 2024 07:11 AM

சிக்கபல்லாபூர்: பறிமுதல் செய்த பணத்தை முறைகேடாக செலவழித்ததால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஏற்க மறுத்த ஏட்டுகள், தங்கள் குடும்பத்தினருடன் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்தாண்டு ஆகஸ்டில்2,000 ரூபாய் நோட்டு பணம் பரிமாற்றம் செய்வதாக, பாகேபள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.ஐ., ரவிகுமார், ஏட்டுகள் நரசிம்மமூர்த்தி, அசோக் ஆகியோர் அங்கு சென்று, மைசூரை சேர்ந்த திரிவேணி என்பவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பணம் செலவழிப்பு
அவரிடம் இருந்த பணத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த பணத்தை சட்ட விரோதமாக செலவு செய்தனர்.
இது தொடர்பாக திப்புரஹள்ளி போலீசில், திரிவேணி புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், மாவட்ட எஸ்.பி.,யிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதன் பேரில், மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பின்னர் சஸ்பெண்ட் வாபஸ் பெறப்பட்டது. மூன்று பேரும் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
போராட்டம்
இந்நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட இரு ஏட்டுகள், நேற்று மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகம் முன், தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றமடைந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்ய முற்பட்டனர். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. தகவல் அறிந்த கூடுதல் எஸ்.பி., காசிம், டி.எஸ்.பி., சிவகுமார் வந்தனர்.
அப்போது ஏட்டுகள், அவர்களிடம், 'இவ்வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. சில அதிகாரிகள் தவறு செய்துள்ளனர். விசாரணையின் போது எங்களின் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
விசாரணை என்ற பெயரில் 'டார்ச்சர்' கொடுக்கின்றனர். எங்களை வேறு மாவட்டத்துக்கு மாற்றுமாறு பலமுறை கேட்டும், மாவட்ட எஸ்.பி., நாகேஷ் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் கீழ் நிலை ஊழியர்கள் என்பதால், எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை' என்றனர்.
அறிவுரை
இதற்கு அதிகாரிகள், 'உங்களின் புகாரை எழுத்து பூர்வமாக தரவும். விசாரணையின் போது நீங்கள் வரவில்லை. விசாரணைக்கு ஆஜராக நேரம் கேட்டுள்ளீர்கள். விசாரணை அதிகாரிகள் அழைத்தால், நீங்கள் வர வேண்டும். வாட்ஸாப்பில் தகவல் தருவது குற்றம்' என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
� எஸ்.பி., அலுவலகம் முன் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுகள். � இருவருக்கும் கூடுதல் எஸ்.பி., காசிம் அறிவுரை வழங்கினார். இடம்: சிக்கபல்லாபூர்.