மாணவர்களுக்கு பாராட்டு விழா: மைசூரு தமிழ் சங்கம் ஏற்பாடு
மாணவர்களுக்கு பாராட்டு விழா: மைசூரு தமிழ் சங்கம் ஏற்பாடு
ADDED : ஜூலை 27, 2024 10:56 PM
மைசூரு: எஸ்.எஸ்.எல்.சி., 2ம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு, மைசூரு தமிழ் சங்கம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
மைசூரு மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., 2ம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, மைசூரு தமிழ் சங்கம் சார்பில், கடந்தாண்டு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இரண்டாம் ஆண்டாக, பாராட்டு விழா இன்று நடத்தப்படுகிறது. மைசூரு நகரின் விஸ்வேஸ்வரா நகர், தொழில்பேட்டை, 2வது ஸ்டேஜில் இன்று காலை 11:00 மணிக்கு விழா நடக்கிறது. விழாவில், கர்நாடக புலிகள் திட்டப்பணி வன பாதுகாவலர் ரமேஷ்குமார், பழநி புலிப்பாணி ஆசிரமத்தின் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், மைசூரு புனித பிலோமினா கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் சீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மாணவ - மாணவியர் என மொத்தம் 43 பேருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மைசூரு தமிழ் சங்கம் சார்பில், சைவம் - அசைவ உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தமிழ் சங்க உறுப்பினர்களும் பங்கேற்குமாறு சங்க தலைவர் பிரான்சிஸ், செயலர் ரகுபதி கேட்டு கொண்டுள்ளனர்.