துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி பீஹாரில் வெடித்தது கலவரம்
துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி பீஹாரில் வெடித்தது கலவரம்
ADDED : பிப் 21, 2025 11:41 PM
ரோஹ்தாஸ்: பீஹாரில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக மோதலில், துப்பாக்கியால் மாணவர் ஒருவர் சுட்டதில், மற்றொரு மாணவர் பலியானார்.
பீஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசராம் பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, பிற பள்ளியைச் சேர்ந்த மெட்ரிக்குலேஷன் மாணவர்களுக்கு தேர்வு நடந்து வருகிறது.
இதன்படி, சமீபத்தில் நடந்த தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, இருதரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு அறையில் கடந்த 19ம் தேதி தகராறு ஏற்பட்டது. கண்காணிப்பாளர்கள் தடுத்ததை அடுத்து அவர்கள் அமைதியாகினர்.
பின், பள்ளி வளாகத்தில் திரண்ட இரு தரப்பு மாணவர்களும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மறுநாளும், இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
ஒரு கட்டத்தில், மாணவர் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பிற மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், 10ம் வகுப்பு மாணவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
உடனடியாக மூவரும் அருகில் இருந்த நாராயண் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி 10ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரு மாணவருக்கு முதுகிலும், மற்றொரு மாணவருக்கு காலிலும் படுகாயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மாணவர் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, இறந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருசக்கர வாகனங்களின் டயர்கள் உள்ளிட்டவற்றை எரித்து, அவர்கள் நடத்திய போராட்டத்தால் சாலையின் இருபுறங்களிலும் பல மணி நேரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன.
மாணவர் இறப்பு விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மாணவர் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.