ADDED : மார் 25, 2024 04:01 AM
குவஹாத்தி : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேரப் போவதாக கூறி சென்ற ஐ.ஐ.டி., குவஹாத்தி மாணவரை, அசாம் போலீசார் கைது செய்தனர்.
டில்லியின் ஓக்லா என்ற பகுதியைச் சேர்ந்த மாணவர், வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள, ஐ.ஐ.டி., குவஹாத்தியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேரப் போவதாக, அந்த மாணவன் போலீசாருக்கு இ - மெயிலில் தகவல் அனுப்பினார்.
இதை உறுதிப்படுத்துவதற்காக, ஐ.ஐ.டி., குவஹாத்தி நிர்வாகத்தினரை, போலீசார் தொடர்பு கொண்ட போது, சம்பந்தப்பட்ட மாணவரை மதியத்தில் இருந்து காணவில்லை என்றும், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், குவஹாத்தியில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள ஹாஜோ என்ற இடத்தில், அந்த மாணவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விடுதியில் அந்த மாணவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார், ஐ.எஸ்., அமைப்பின் கொடியை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

