ADDED : மே 29, 2024 12:47 AM

பாட்னா, பீஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள பி.என்.., கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தவர் ஹர்ஷ் ராஜ், 22. இவர் நேற்று தேர்வுக்காக பாட்னாவில் உள்ள சுல்தான்கஞ்ச் சட்ட கல்லுாரிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சூழ்ந்துகொண்டு உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினர்.
தாக்குதலுக்கு ஆளான மாணவர் ஹர்ஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு மாணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
பாட்னாவில் உள்ள சட்டக்கல்லுாரி வளாகத்தில் நுழைந்த சிலர், ஹர்ஷை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.
வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. கடந்தாண்டு நடந்த தசரா திருவிழாவின் போது, இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரிய வந்தது.
இவ்வாறு போலீசார் கூறினர்.