ராகுலின் குடியுரிமையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் சாமி மனு
ராகுலின் குடியுரிமையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் சாமி மனு
ADDED : ஆக 17, 2024 12:11 AM
புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, 2019ல், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
கடந்த 2003ல் பதிவு செய்யப்பட்ட, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, 'பேக்ஆப்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக ராகுல் இருந்துள்ளார். 2006 அக்., 31ல், அந்நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு வருமான வரிக் கணக்கில், ராகுல் தன் குடியுரிமையை, பிரிட்டிஷ் என அறிவித்துள்ளார். 2009 பிப்., 17ல் அந்நிறுவனம் கலைக்கப்பட்டது.
அந்த விண்ணப்பத்திலும், தன் குடியுரிமை பிரிட்டிஷ் என, அவர் குறிப்பிட்டு இருந்தார். இது, அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு -- 9 மற்றும் இந்திய குடியுரிமை சட்டம் - 1955ஐ மீறுகிறது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, 15 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி, 2009 ஏப்., 29ல், உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு கடிதம் எழுதியது. எனினும் அவர் பதிலளிக்கவில்லை என, கூறப்படுகிறது.
இந்நிலையில், ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில், 'ராகுல் மீது வழக்கு தொடர உள்துறை அமைச்சகம் தவறியதற்கும், அவரது இந்தியக் குடியுரிமையை ஏன் பறிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க தவறியதற்கும் எதிராக, என் வழக்கறிஞர் சத்ய சபர்வால் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
'உள்துறை அமைச்சகத்துக்கு பதிலளிக்க ராகுல் மறுத்ததை அடுத்து, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது' என்றார். பிரிட்டிஷ் குடியுரிமை காரணமாக, லோக்சபா தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு தடை கோரிய மனுவை, 2019 மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

