ADDED : மே 30, 2024 09:57 PM

பெங்களூரு, - நாட்டிலேயே முதன் முறையாக, 'பாக்ஸ் ஷேப்டு புஷ்ஷிங் டெக்னாலஜி' என்ற சதுர வடிவிலான சுரங்கப்பாதை தொழில்நுட்பத்தை, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் பயன்படுத்துகிறது.
இந்தியாவின் மற்ற மெட்ரோ நிறுவனங்களை விட, பெங்களூரு மெட்ரோ நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில், ஆர்வம் காண்பிக்கிறது. தற்போதைய மெட்ரோ பணிகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
இதுவரை நிலத்தடி சுரங்கப்பாதைகள், வட்ட வடிவில் தோண்டப்பட்டது. தற்போது சதுர வடிவில் சுரங்கம் தோண்ட, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, 'பாக்ஸ் ஷேப்டு புஷ்ஷிங்' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் முதல் மெட்ரோ நிறுவனம் என்ற பெருமை, பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கு கிடைத்துஉள்ளது.
நாகவாரா வெளிவட்ட சாலையில் நடக்கும் மெட்ரோ பணிகளில், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, வெற்றி அடைந்துள்ளது.
நாகவாரா வெளிவட்ட சாலையின், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் மெட்ரோ ணிகள் நடக்கின்றன. இங்கு 77 மீட்டர் அகலமான சதுர வடிவில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
நாகவாராவில் இருந்து, காளேன அக்ரஹாரா வரை, 21.26 கி.மீ., தொலைவிலான புதிய மெட்ரோ பாதையை, மார்ச் 2025 க்குள் வர்த்தக பயன்பாட்டுக்கு திறக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்த பாதை முடிந்த பின், நம்ம மெட்ரோ இணைப்பு 117 கி.மீ., ஆக இருக்கும். தற்போது பாக்ஸ் ஷேப்டு புஷ்ஷிங் என்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, சுரங்கப்பாதை தோண்டப்படுகிறது. இது பணிகளுக்கு உதவியாக இருக்கும்.
சதுர வடிவில் உள்ள சுரங்கத்துக்குள், மின் இணைப்பு ஏற்படுத்துவது உட்பட, மற்ற பணிகளுக்கு இட வசதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.