8 வயது சிறுமி திடீர் உயிரிழப்பு; மருத்துவமனை முன் போராட்டம்
8 வயது சிறுமி திடீர் உயிரிழப்பு; மருத்துவமனை முன் போராட்டம்
ADDED : ஆக 30, 2024 09:56 PM
மாலுார் : காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த 8 வயது சிறுமி உயிரிழந்ததால், மருத்துவமனை முன் பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தினர்.
மாலுார் ராஜிவ் நகரைச் சேர்ந்த ஷகீப் என்பவர் மகள் அனம் பானு, 8. இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. நேற்று முன்தினம், சிறுமியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சிறுமியின் பெற்றோர் அழைத்துச் சென்றனர். சிறுமியை டாக்டர் ரமேஷ் பரிசோதித்தார். 'டிரிப்ஸ்' மூலம் மருந்து செலுத்துமாறு நர்ஸ்களிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்றார்.
சிறிது நேரத்தில், அந்த சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த பெற்றோர், டாக்டரை அழைத்துள்ளனர்.
அங்கு டாக்டர் இல்லை; நர்ஸ்கள் வந்து பார்த்தனர். டாக்டருக்கு மொபைல் போனில் தகவல் கொடுத்துள்ளனர். அவரும் வந்தார்.
வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறிவிட்டு சென்றார். சிறுமியை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருரில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு மருந்தின் அளவு அதிகமாக உடலில் செலுத்தியதன் விளைவால் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால், அதே ஆம்புலன்ஸ் மூலம், மாலுாரில் அலட்சியமாக சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு சிறுமியின் உடலை கொண்டு வந்தனர். மருத்துவமனையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்தார். டாக்டர் ரமேஷிடம் விசாரணை நடத்தினார்.
அவர் கூறுகையில், ''இந்த சாவு, எங்கள் மருத்துவமனையில் நடக்கவில்லை. மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற இடத்தில் தான் உயிர் இழந்துள்ளார். எங்களுக்கு சம்பந்தமில்லை,'' என்றார்.
இதை கேட்ட சிறுமியின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களின் அலட்சியத்தால் இதற்கு முன்பும் கூட சிலர் இறந்துள்ளதாக குற்றஞ்சாட்டினர்.
இவர்களை சமாதானப்படுத்திய இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், புகார் அளிக்குமாறு கூறினார். உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
மருத்துவமனைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.