'ஏர்போர்ட்' வாயிலை மூடி பொதுமக்கள் திடீர் போராட்டம்
'ஏர்போர்ட்' வாயிலை மூடி பொதுமக்கள் திடீர் போராட்டம்
ADDED : ஜூலை 02, 2024 06:40 AM

மங்களூரு: மங்களூரு விமான நிலையத்திலிருந்து வரும் மழைநீர், வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்கக்கோரி, விமான நிலைய நுழைவு வாயிலில் தடுப்புகள் வைத்து, எந்த வாகனங்களும் செல்லாதவாறு உள்ளூர்வாசிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், பஜ்பேயில் மங்களூரு சர்வதேச விமான நிலையம் இயங்குகிறது. மலை மீது உள்ள இந்த விமான நிலையத்தின் ஓடு பாதையில் இருந்து, மழை பெய்யும் போதெல்லாம், மழைநீர் கீழே பாயும்.
இதனால், மலையின் கீழே உள்ள கெஞ்சாறு, கரம்பார் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் தொடர்ந்து சிரமப்படுகின்றனர்.
பல முறை கோரிக்கை விடுத்தும், விமான நிலைய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் ஓடு பாதையில் இருந்து வெளியேறும் வெள்ளத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மழை பெய்தாலே, இப்பகுதி மக்கள் நகர வேதனையை சந்திக்கின்றனர். தற்போது, மங்களூரில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், மக்கள் திண்டாடி வருகின்றனர். அவர்களின் ரேஷன் பொருட்கள் நீரில் மூழ்கின.
புகார் அளித்தும், அதிகாரிகளிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் மக்கள் விரக்தியடைந்தனர். இதனால் ஆக்ரோஷமடைந்து, விமான நிலையத்துக்குள் வாகனங்கள் செல்லும் நுழைவு வாயிலில் நேற்று தடுப்புகள் அமைத்து, போராட்டம் நடத்தினர். பலரும் கோரியும் போராட்டத்தை கைவிடவில்லை.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். கலெக்டர் மற்றும் தாசில்தார் நேரில் பார்வையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பிரச்னையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன்பின்னரே போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். இந்த போராட்டத்தால், அரைமணி நேரத்துக்கும் மேலாக விமான பயணியர் அவதிப்பட்டனர்.
மங்களூரு வடக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, அப்பகுதியினரின் குறைகளை கேட்டறிந்தார்.