ADDED : ஏப் 21, 2024 06:37 AM

பெங்களூரு: பெங்களூரில் நேற்று பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது. நகரவாசிகள் 'குஷி' அடைந்து உள்ளனர்.
கர்நாடகாவில் ஆண்டு தோறும் ஜூன் மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இந்த ஆண்டு வழக்கத்தை விட, கோடை காலம் முன்கூட்டியே துவங்கியது. இதனால் நீர்நிலைகள் வறண்டன. பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பணம் கொடுத்து டேங்கர் தண்ணீர் வாங்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டனர். மழை எப்போது வரும் என்று, நகர மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். நாள் தோறும் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் கர்நாடகாவில் சில மாவட்டங்களில், கோடை மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெங்களூரின் எலஹங்கா, கெங்கேரி பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று மதியம் ஜெயநகர், விதான் சவுதா, ஜெ.பி.நகர், மல்லேஸ்வரம், பொம்மனஹள்ளி, பேகூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.
இத்தனை நாட்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த நகரவாசிகளுக்கு, மழை பெய்வது குஷியை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. ஷிவமொகா மாவட்டத்தில் பெய்யும் மழையால், சாகர் தாலுகாவில் பல கிராமங்களில் வாழை மரங்கள் சாய்ந்து உள்ளன.
தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய, கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது.
சிக்கமகளூரில் ஆல்துார், தரிகெரே, பீரூர், கடூர் பகுதிகளில் கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் தேங்கியது. கலபுரகி ஆலந்த் நகரில் நேற்று மதியம் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த, இருசக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

