ரூ.4.80 கோடி சிக்கிய வழக்கு அதிகாரியிடம் சுதாகர் கெஞ்சல்
ரூ.4.80 கோடி சிக்கிய வழக்கு அதிகாரியிடம் சுதாகர் கெஞ்சல்
ADDED : ஏப் 27, 2024 11:25 PM

பெங்களூரு: ஆதரவாளர் வீட்டில் 4.80 கோடி ரூபாய் சிக்கிய வழக்கில், சிக்கபல்லாபூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. பணம் சிக்கியவுடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி முனிஷ் மவுத்கில் உதவியை, சுதாகர் நாடியது தெரிய வந்துள்ளது.
சிக்கபல்லாபூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகர். முன்னாள் சுகாதார அமைச்சர். கடந்த 25ம் தேதி சுதாகரின் ஆதரவாளர் கோவிந்தப்பா என்பவர் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 4.80 கோடி ரூபாய் சிக்கியது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் சுதாகர் மீது மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முனிஷ் மவுத்கில்
இந்த பணம் சிக்கியதும், தேர்தல் பறக்கும் படை பொறுப்பாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி முனிஷ் மவுத்கில் உதவியை, சுதாகர் நாடி உள்ளார்.
கடந்த 25ம் தேதி காலை 11:45 மணிக்கு, கோவிந்தப்பா வீட்டில் பத்து கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, தேர்தல் பறக்கும் படை பொறுப்பாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர், உடனடியாக வருமான வரி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
குறுஞ்செய்திகள்
இதையடுத்து, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ஆனந்த் ரட்கல் தலைமையில், கோவிந்தப்பா வீட்டில் சோதனை நடந்தது. அப்போது முனிஷ் மவுத்கில் 'வாட்ஸாப்' நம்பருக்கு, சுதாகர் மூன்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
முதல் குறுஞ்செய்தியில், 'கோவிந்தப்பா வீட்டிற்கு வருமான வரி அதிகாரிகள் செல்கின்றனர்' என்று கூறி உள்ளார்.
இரண்டாம் குறுந்தகவலில், 'பறிமுதல் செய்யப்படும், பணத்தை விட்டுவிடுங்கள்' என்று கூறி உள்ளார். மூன்றாம் குறுந்தகவலில், 'தயவுசெய்து உதவுங்கள். உங்களுக்கு மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்' என்று கூறி உள்ளார்.
இதை பார்த்த முனிஷ் மவுத்கில், சுதாகர் பெயரில், வேறு யாராவது குறுந்தகவல் அனுப்புகின்றனரா என்று, சந்தேகம் அடைந்தார். உடனடியாக சுதாகரின் மொபைல் நம்பரை சரி பார்த்தார். அது சுதாகர் மொபைல் எண் என்பதை உறுதி செய்தார்.
இதன் பின்னர், சுதாகர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி முனிஷ் மவுத்கில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி., ரூபாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

