வேட்புமனுவை வாபஸ் பெறாத ஈஸ்வரப்பாவுக்கு சுயே., சின்னம்
வேட்புமனுவை வாபஸ் பெறாத ஈஸ்வரப்பாவுக்கு சுயே., சின்னம்
ADDED : ஏப் 23, 2024 05:17 AM

ஷிவமொகா : இறுதி விநாடியில், முன்னாள் முதல்வர் ஈஸ்வரப்பா மனம் மாறுவார் என்ற பா.ஜ.,வின் எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது. வேட்புமனுவை திரும்ப பெறாமல் தேர்தல் களத்தில் நிற்கிறார். அவருக்கு, 'இரு கரும்புடன் கூடிய விவசாயி' என்ற சுயேச்சை சின்னம் கிடைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு ஈஸ்வரப்பா சீட் கேட்டார். ஆனால் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை, பா.ஜ., மேலிடம் களமிறக்கியது. இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார்.
இவரை சமாதானம் செய்ய, தலைவர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இவரை சமாதானம் செய்யும் முயற்சியை கைவிட்ட தலைவர்கள், ஏப்ரல் 22 வரை காலக்கெடு விதித்தனர். அதற்குள் வேட்புமனுவை திரும்ப பெறா விட்டால், கட்சியை விட்டு நீக்குவதாக எச்சரித்திருந்தனர்.
வேட்புமனுவை திரும்ப பெற, நேற்று கடைசி நாளாக இருந்தது. ஈஸ்வரப்பா மனம் மாறி வேட்பு மனுவை திரும்ப பெறுவார் என, தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது பொய்த்துவிட்டது.
அவர் வேட்புமனுவை திரும்ப பெறாமல் களத்தில் இருக்கிறார். அவருக்கு தேர்தல் ஆணையம், 'இரு கரும்புடன் கூடிய விவசாயி' சின்னத்தை அளித்துள்ளது. இந்த சின்னம் அவருக்கு சக்தியளிக்கும் என, ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
தற்போது பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திரா, காங்கிரசின் கீதா சிவராஜ்குமார் உட்பட, 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுயேச்சைகள் பாலகிருஷ்ண பட், சசிகுமார் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். ஆம் ஆத்மியின் சபான் கான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

