ADDED : மே 16, 2024 06:11 AM

மைசூரு : பிரசித்தி பெற்ற ஸ்ரீகண்டேஸ்வரா கோவில் உண்டியலில், 1.72 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது. பெண் ஒருவர் எழுதியுள்ள தற்கொலை கடிதமும் கிடைத்தது.
மைசூரு, நஞ்சன்கூடின், ஸ்ரீகண்டேஸ்வரா கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தென்காசி எனவும், அழைக்கப்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கோவிலின் வருவாயும் அதிகரிக்கிறது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் எண்ணப்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் கோவிலின் அன்னதான பவனில், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. காலை துவங்கிய பணி, நள்ளிரவு வரை தொடர்ந்தது. உண்டியலில் 1,72,85,286 ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது. 92.50 கிராம் தங்கம், 3.5 கிலோ வெள்ளி பொருட்கள், 33 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக வந்தன.
பவுர்ணமி உட்பட, சிறப்பு நாட்களில் பக்தர்கள் அதிகம் வந்ததால், அதிக காணிக்கை வசூலானது. கோரிக்கை கடிதங்களும் இருந்தன. 'தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், சொத்துகள் கொடு. குழந்தை வரம் வேண்டும், என் குழந்தையின் ஜாதகத்தில் உள்ள தோஷத்தை நிவர்த்தி செய்' என, பல வேண்டுதல்களை வைத்திருந்தனர்.
பெண் ஒருவரின் தற்கொலை கடிதமும் உண்டியலில் போடப்பட்டிருந்தது. அதில் அப்பெண், 'அளவுக்கு அதிகமாக கடன் சுமை உள்ளது. வங்கிக்கு வட்டி கட்ட முடியவில்லை. என் நகைகள் அனைத்தும் அடமானம் வைத்துள்ளோம். என்னிடம் பணம் இல்லாததால், என் கணவர் சிறு, சிறு விஷயத்துக்கும் என்னுடன் சண்டை போடுகிறார்.
'இந்த வாழ்க்கையே தேவையில்லை என, முடிவு செய்துவிட்டேன். நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்த பின், என் தாய், தந்தை, கணவர், மகன் என்னை பற்றி சிந்திப்பதை விட்டு விட்டு, நிம்மதியாக வாழட்டும்' என கூறியிருந்தார்.
பெண் கடிதத்தை படித்து, அனைவரும் வருந்தினர்.