குமாரசாமிக்கு விபூதி அடிக்க பார்க்கும் சுமலதா மாண்டியா தொகுதியை கைக்குள் வைக்க திட்டம்
குமாரசாமிக்கு விபூதி அடிக்க பார்க்கும் சுமலதா மாண்டியா தொகுதியை கைக்குள் வைக்க திட்டம்
ADDED : ஏப் 13, 2024 05:47 AM

கர்நாடக அரசியல்வாதிகளோட மனநிலை இருக்கே... அடிக்கடி மாறும் குணம் கொண்டது... எந்த நேரத்துல என்ன நினைக்குறாங்க... என்ன பண்ண போறாங்கன்னு யாருக்குமே தெரியாது...
இன்னைக்கு ஒரு கட்சியில இருக்குறவங்க... நாளைக்கு இன்னொரு கட்சியில இருப்பாங்க... மறுநாள் இன்னொரு கட்சிக்கு ஓடுவாங்க.
ஏ என்னப்பா நேத்து தான உன்ன, அந்த கட்சியில பார்த்தேன். கட்சிய விட்டு விலக மாட்டேன்னு சொன்ன? அப்படின்னு கேட்டா... அதுவா சும்மா லுலுலாயி... அது வேற... இது வேற... நமக்கு பதவி, அதிகாரம் தான் முக்கியம். அது கிடைக்குற கட்சிக்கு தானே போகணும்னு, தத்துவ சிகாமணி மாதிரிபேசுவாங்க.
நேர்மையா அரசியல் செஞ்சு, மக்களுக்கு சேவை ஆற்றணும்னு யாருக்கும் நினைப்பு கிடையாது... நம்ம நல்லா இருக்கணும், குடும்பம் நல்லா இருக்கணும் அவ்வளவு தான்.
காங்கிரஸ் கூட்டணி
50 ஆண்டா அரசியல்ல இருக்கேன்னு, பெருமை அடித்துக் கொள்ளும் சித்தராமையாவே ம.ஜ.த.,வுல இருந்தவரு. அங்கு இருந்து ஓடிவந்து, சோனியா கிட்ட நைசா பேசி முதல்வர் ஆயிட்டாரு...
பதவி, அதிகாரத்துக்காககர்நாடக அரசியல்வாதிகளுக்கு, கால பிடிக்கவும் தெரியும், வாரி விடவும் தெரியும்.
கிராமத்துல சொல்லும் கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசைன்னு. அது யாருக்கு பொருந்துதோ இல்லயோ, குமாரசாமிக்கு நல்லா பொருந்தும்.
சட்டசபை தேர்தல்ல அவரு கட்சியான ம.ஜ.த., அதிக இடத்துல வெற்றியும் பெறாது. ஆனாலும் குமாரசாமிக்கு முதல்வர் ஆயிடணும்... 2018 சட்டசபை தேர்தல்ல எந்த கட்சிக்கும் ஆட்சிக்கு வர பெரும்பான்மை கிடைக்கல. பா.ஜ., ஆட்சிக்கு வராம இருக்குறத தடுக்க, ம.ஜ.த.,வுடன் காங்கிரஸ்காரங்க கூட்டணி போட்டாங்க...
பெண் கண்ணீர்
பெரும்பான்மையோட ஆட்சிக்கு வர்ற கட்சியிலயே, முதல்வர் பதவிக்கு அடிபுடி நடக்குது. ஆனா 37 எம்.எல்.ஏ.,க்களை வைச்சிட்டு, காங்கிரஸ் ஆதரவோட குமாரசாமி முதல்வரு ஆனாரு. கூரையில இருக்குறவனுக்கு கடவுள் பிச்சிட்டு கொடுப்பார்னு சொல்லுவாங்க. அதுபோல குமாரசாமிக்கு கடவுள் முதல்வர் பதவி கொடுத்தாரு. ஆனா அத காப்பாத்திக்க முடியல.
கடந்த 2019ல அவரு முதல்வரா இருந்தப்ப லோக்சபா தேர்தல் நடந்துச்சு. தவப்புதல்வன் நிகில மாண்டியாவுல இறக்கிவிட்டாரு. எதிர்போட்டியாளர் நடிகை சுமலதா. காங்கிரசில் சீட் கிடைக்காம போனதுனால, சுயேச்சையா போட்டியிட்டாங்க.
மகன வெற்றி பெற வைக்க, சுமலதாவை பற்றி பேசாத பேச்செல்லாம் பேசுனாரு குமார சாமி. நாம தான் முதல்வர் ஆச்சே... நம்ம யாரு கேட்க போறாங்க... பேசுவோம்னு இஷ்டத்துக்கு பேசுனாரு.
கர்மாவின் செயல்
பெண் கண்ணீர் பொல்லாததுன்னு சொல்வாங்க... சுமலதா வடிச்ச கண்ணீர பார்த்து, அவர வெற்றி பெற வைச்சாங்க, மாண்டியா மக்கள்.
சுமலதா எம்.பி., ஆனதுக்கு அப்புறம் விடல குமாரசாமி. இரண்டு பேருக்கும் நீயா, நானா போர் நடந்துச்சு. எம்.பி.,யா இருந்த அஞ்சு வருஷத்துல, சுமலதா என்ன பண்ணுனாங்களோ இல்லயோ... பா.ஜ., மேலிடம் கூட நட்பை வளர்த்துக் கிட்டாங்க.
நடக்க இருக்குற லோக்சபா தேர்தல்ல, மாண்டியா பா.ஜ., 'சீட்'டுக்கு அடிபோட்டாங்க. ஆனா பா.ஜ., மேலிடமோ, கூட்டணியில இருக்குற ம.ஜ.த.,வுக்கு சீட் ஒதுக்குனாங்க. குமாரசாமியே வேட்பாளர் ஆனாரு. யாருக்கு எதிராக ஐந்து வருஷமா பேசிட்டு வந்தாரோ, அவங்க வீட்டுக்கே போயி ஆதரவு கேட்டாரு. கர்மா யார விட்டுச்சு...
இப்போ சுமலதாவ அக்கான்னு சொல்லி நடிச்சிட்டு வர்றாரு. பாசமலர் சிவாஜி கணேசனுக்கே, குமாரசாமி நடிப்புல 'டப்' கொடுப்பாரு போல. ஆனா சுமலதாவோ, குமாரசாமி நடிப்புக்கு மயங்கல. சுமலதா நடிகை ஆச்சே.
பிரசார களம்
ஆரம்பத்துல பா.ஜ., மேலிடம் சொன்னா, மாண்டியாவுல பிரசாரம் பண்ணுவேன்னு சொன்னாரு. அத குமாரசாமியும் நம்பிட்டாரு... ஆனா இன்னும் சுமலதா மாண்டியாவுல பிரசாரம் செய்யல. என்ன பைத்தியகாரியாவே நினைச்சிட்டு இருக்கியான்னு கேட்காம கேட்ட, குமாரசாமிக்கு நெத்தியடி கொடுத்து இருக்காரு சுமலதா.
அரசியல் அனுபவமே இல்லாம, தேர்தல்ல போட்டியிட்ட சுமலதாவ, மாண்டியா மக்கள் வெற்றி பெற வைச்சாங்க. இப்போ அவருக்கு ஓரளவு அரசியல் தெரிஞ்சிருக்கும்.
மாண்டியாவ விட்டு தர மாட்டேன்னு, பிடிவாதமாக இருந்த சுமலதாகிட்ட, பா.ஜ.,காரங்க நைசாக பேசி, சம்மதிக்க வைச்சாங்க. குமாரசாமிக்கு ஆதரவாக பிரசாரம் பண்ணி ஒரு வேளை, அவரு ஜெயிச்சிட்டா. அடுத்த தேர்தல்லயும் மாண்டியாவுல சீட் கேட்பாரு. அவரு தோத்து போயிட்டா... நான் நின்னு இருந்தா ஜெயிச்சிருப்பேன்... என் பேச்ச யாரும் கேட்கலயேன்னு பா.ஜ., மேலிடத்துல கொளுத்தி போடவும் தயாராகி வர்றாரு.
மொத்தத்துல குமாரசாமிக்கு விபூதி அடிக்க, சுமலதா தயாராகி இருக்காரு. குமாரசாமி தோத்து போயிட்டா, மாண்டியா தொகுதிய பிடிக்குறது தான் இவங்களுக்கு குறி- நமது நிருபர் -.

