ADDED : ஆக 28, 2024 01:01 AM
புதுடில்லி, சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் பணப்பரிமாற்ற மோசடி வழக்குகள் தொடர்பாக தமிழக மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் அதில் தொடர்புடைய பணப்பரிமாற்ற மோசடி குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி வேலுார், திருச்சி, கரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலுார் மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு செய்தது. இந்த மனு, நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கேட்டிருந்த பெரும்பாலான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமிருக்கும் ஒரு சில ஆவணங்களையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிப்பதாக கலெக்டர்கள் உறுதி அளித்துள்ளனர்.
'எனவே, இந்த மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க இயலாது' என, உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.