பலாத்கார நபர்களுக்கு ஆதரவா? அகிலேசுக்கு பா.ஜ., கண்டனம்
பலாத்கார நபர்களுக்கு ஆதரவா? அகிலேசுக்கு பா.ஜ., கண்டனம்
UPDATED : ஆக 05, 2024 12:52 AM
ADDED : ஆக 05, 2024 12:43 AM

அயோத்தி: உத்தர பிரதேசத்தில் 12 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கியவர்களை சமாஜ்வாதி கட்சி காப்பாற்ற முயற்சிப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
விசாரணை
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இரு மாதங்களுக்கு முன், 12 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த மொய்த் கான், ராஜு கான் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் கர்ப்பமானது தெரிய வந்ததை அடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபமானது. இதையடுத்து, மொய்த் கான் மற்றும் ராஜு கானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மொய்த் கான் சமாஜ்வாதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,க்கள் பாபுராம் நிஷாத், சங்கீதா பல்வந்த் பிந்த், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நரேந்திர காஷ்யப் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கடும் தண்டனை
'இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த வேண்டும். அதன் பின்னரே அவர்களை குற்றவாளியாக கருதமுடியும்' என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
'இந்த விவகாரத்தில் அரசு தன் கடமையை செய்து வருகிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றவாளிகளை காப்பாற்ற சமாஸ்வாதி கட்சியினர் முயற்சிக்கின்றனர்' என, பா.ஜ., தலைவர்கள் கூறினர்.