கனிமங்கள் ராயல்டியில் பங்கு தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
கனிமங்கள் ராயல்டியில் பங்கு தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
ADDED : ஆக 01, 2024 02:09 AM
புதுடில்லி :சுரங்கங்கள், கனிம வளமுள்ள நிலங்கள் மற்றும் கனிமங்களுக்கு, 1989ல் இருந்து மத்திய அரசு வசூலித்த, 'ராயல்டி'யில் இருந்து தங்களுடைய பங்கை திருப்பித் தரும் மாநிலங்களின் கோரிக்கை மீதான உத்தரவை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
சுரங்கங்கள், கனிம வளமுள்ள நிலங்களுக்கு, ராயல்டி எனப்படும் காப்புத் தொகையை மத்திய அரசு வசூலிக்கிறது. அவ்வாறு குத்தகை பெற்றிருந்த 'இண்டியா சிமென்ட்ஸ்' நிறுவனம் செலுத்தி வந்த ராயல்டி மீது, 'செஸ்' எனப்படும் கூடுதல் வரியை தமிழக அரசு விதித்தது.
மாநில உரிமை
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு, 1989ல் உத்தரவு பிறப்பித்தது. அதில், 'ராயல்டி என்பதும் வரி தான்; எனவே, அதன் மீது கூடுதலாகவோ அல்லது தனியாகவோ வரி விதிக்க முடியாது' என்று கூறப்பட்டிருந்தது.
இது போன்ற மற்றொரு வழக்கில், 2-004ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு, ராயல்டி என்பது வரியல்ல என்று கூறியது. அதனால், வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து, கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அமர்வின் 8:1 என்ற பெரும்பான்மை உத்தரவில், ராயல்டி என்பது வரியாகாது. அதனால், வரி வசூலிக்க மாநிலங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை, 1989ல் இருந்து முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என, கனிம வளங்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் வலியுறுத்தின.
நிதிச்சுமை
அதாவது, ஏற்கனவே வசூலித்த ராயல்டியில், மாநிலங்களுக்கான பங்கை அளிக்க வேண்டும் என்றும், வரி விதிப்பை முன்தேதியிட்டு வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இதனால், முக்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த கோரிக்கை தொடர்பாக, ஒன்பது நீதிபதிகள் அமர்வு நேற்று விசாரித்தது. பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்த வலியுறுத்தின.
அதே நேரத்தில் பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை, பின் தேதியிட்டு அமல்படுத்தலாம் என்றன. பா.ஜ., ஆளும் கனிமவளம் அதிகமுள்ள ஒடிசா மாநிலம், இதில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். இது, மத்திய அரசுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும், முன்தேதியிட்டு வரி வசூலித்தால், நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் வாதிட்டார்.
இந்த வாதங்களைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.