தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தில் முடிவுகள் எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தில் முடிவுகள் எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
ADDED : மே 24, 2024 12:53 AM
புதுடில்லி, சி.எஸ்.ஐ., எனப்படும், தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்தை கவனிக்கவும், சினோடு பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்தவும் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு, அது தொடர்பாக முடிவுகள் எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தென்னிந்திய திருச்சபையின், 'மாடரேட்டர்' எனப்படும், தலைமை பேராயராக தர்மராஜ் ரசலம் உள்ளார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 டயோசிஸ்கள், தென்னிந்திய திருச்சபையில் உள்ளன.
சி.எஸ்.ஐ.,க்கு சொந்தமாக, 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன.
சி.எஸ்.ஐ.,யை நிர்வகிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கவும், சட்ட விதிகளை பின்பற்றி சினோடு நிர்வாகிகள் தேர்தலை நடத்தக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சினோடு மாடரேட்டர் தேர்தலை நடத்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசனை தேர்தல் அதிகாரியாக நியமித்து, நான்கு மாதங்களில் தேர்தலை முடிக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
விசாரணையின் இறுதியில், தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்தை கவனிக்கவும், சினோடு பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடத்தவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்ரமணியன், வி.பாரதிதாசன் ஆகியோரை நிர்வாகிகளாக நியமித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனு விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், விசாரணை முடிவடையும் வரை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு தேர்தலை நடத்தவும், திருச்சபை நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை ஜூலை மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.