ரோகிணி - ரூபா சமரசமாக செல்ல உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
ரோகிணி - ரூபா சமரசமாக செல்ல உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : மே 09, 2024 05:32 AM

ஐ.ஏ.எஸ்., ரோகிணி சிந்துாரி - ஐ.பி.எஸ்., ரூபா இருவரும் சமாதானமாக செல்ல, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
கர்நாடகா அரசிதழ் துறையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றுபவர் ஐ.ஏ.எஸ்., ரோகிணி சிந்துாரி, 39. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றுபவர் ஐ.பி.எஸ்., ரூபா, 47. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரோகிணி சிந்துாரி பற்றி, 19 குற்றச்சாட்டுகளை ரூபா முன்வைத்தார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. தலைமைச் செயலர் உத்தரவையும் மீறி, இருவரும் ஊடகங்கள் முன் ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்தனர். இதனால் பதவி பறிக்கப்பட்டு, இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
மானநஷ்ட வழக்கு
ஏழு மாதங்களுக்கு பின்பு தான், இருவருக்கும் பணி ஒதுக்கப்பட்டது. இதற்கிடையில் ரூபா மீது ரோகிணி சிந்துாரி, மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரூபா மனு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் அபய் சீனிவாஸ் ஒகா, பங்கஜ் மித்தல் விசாரிக்கின்றனர்.
கடந்த பிப்ரவரியில் நடந்த விசாரணையின்போது, ரூபா, ரோகிணி சிந்துாரி இருவரும் சமரசமாக செல்ல நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். ஆனால் அதை ஏற்க இருவரும் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இளம் அதிகாரிகள்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் அபய் சீனிவாஸ் ஒகா, பங்கஜ் மித்தல் கூறுகையில், ''இரு அதிகாரிகளும் பொதுப்பணியில் உள்ளனர். அவர்களுக்குள் சண்டை தொடரக் கூடாது. இருவரும் இளம் அதிகாரிகள். சண்டை தொடர்ந்தால், அவர்களின் தொழில் பாதிக்கப்படும். இதனால் இருவரும் ஒருமித்த கருத்துக்கு வந்து, சமாதானமாக செல்ல வேண்டும்,'' என்று கூறினார்.
ரோகிணி சார்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் கூறுகையில், ''என் மனுதாரர் சமாதானமாக செல்ல விரும்பவில்லை. ஆனாலும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க, கூடுதல் அவகாசம்தேவைப்படுகிறது,'' என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த வாரம் விசாரணையை ஒத்திவைத்தனர்.
- நமது நிருபர் -