நீதித்துறைக்கே நிதி இல்லையா? உச்ச நீதிமன்ற நீதிபதி வருத்தம்
நீதித்துறைக்கே நிதி இல்லையா? உச்ச நீதிமன்ற நீதிபதி வருத்தம்
ADDED : பிப் 24, 2025 05:13 AM

பெங்களூரு,: ''நீதித்துறைக்கு போதுமான நிதியை மாநில அரசு வழங்கவில்லை,'' என உச்ச நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்து உள்ளார்.
கர்நாடகா மாநில நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியும், நீதித்துறை சார்பில் மாநில அளவிலான எட்டாவது மாநாடும் நேற்று பெங்களூரில் நடந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் பேசியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளில் நீதித்துறையிடம் இருந்து, தேர்வு கட்டணம், நீதிமன்ற கட்டணம், அபராத தொகை என 1,044 கோடி ரூபாயை, மாநில அரசு வசூலித்து உள்ளது. இந்த தொகையில் இருந்து எவ்வளவு தொகை, நீதித்துறையின் வளர்ச்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நீதித்துறைக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக கூறுவது தவறானது. 2022 -23 ல் 364.40 கோடி ரூபாயும்; 2023 - 24 ல் 376.80 கோடி ரூபாயும்; 2024 - 25 ல் 302.80 கோடி ரூபாயும் அரசு வசூலித்து உள்ளது. இந்த நிதியில் பாதி கூட வழங்கப்படவில்லை.
நீதி வழங்குவதில், ஒரு நீதிபதியின் பங்கை போலவே, நீதித்துறை ஊழியர்களின் பங்கும் இருக்க வேண்டும். பி.டி.ஏ.,வால் கட்டப்படும் வீடுகளில் 10 முதல் 20 சதவீத வீடுகள் நீதித்துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.
மாவட்ட நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள், ஊழியர்களிடம் அதிகார தோரணையை காண்பிக்கக்கூடாது. ஊழியர்களுக்கு தகுதியின் அடிப்படையிலே பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா என பலர் கலந்து கொண்டனர்.