ADDED : ஜூலை 11, 2024 06:24 AM

பெண் கடத்தல் வழக்கில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகள் பவானி ரேவண்ணாவுக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, 66. இவரது மனைவி பவானி, 55. இவர்களின் மூத்த மகன் பிரஜ்வல், 33. ஹாசன் முன்னாள் எம்.பி., பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக, பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்த வழக்கில் பவானிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததால், அவரை கைது செய்ய சிறப்பு விசாரணை குழு நடவடிக்கை எடுத்தது. ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றார்.
பவானிக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதி சூரியகாந்த் நேற்று விசாரித்தார்.
சிறப்பு விசாரணைக் குழு சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ''பாதிக்கப்பட்ட பெண் 164 பிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல், கர்நாடக உயர்நீதிமன்றம் பவானிக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது. இதனால் முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூரியகாந்த், ''மகன் செய்த தவறுக்கு தாய் என்ன செய்வார்? அவருக்கு 55 வயது ஆகிறது. இந்த வழக்கில் அரசியல் வேண்டாம்,'' என்றார்.
இதற்கு சிறப்பு விசாரணைக்கு வக்கீல், ''நாங்கள் அரசியல் செய்யவில்லை. அவர் இந்த வழக்கில் முக்கியமான நபர். விசாரணையை கண்டிப்பாக அவர் எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்.
பவானி சார்பில் ஆஜராக வக்கீல்கள் யாரும் வராததால், விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார். பவானிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.