சுருக்குமடி வலை தொடர்பான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சுருக்குமடி வலை தொடர்பான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : மார் 05, 2025 05:11 AM

புதுடில்லி: 'சுருக்குமடி வலை தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், 12 கடல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்க, காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை, தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம்' என, உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும், நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடியதாவது:
சுருக்குமடி வலை பயன்படுத்துவதால், இயற்கை வளம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்பதை கருத்தில் வைத்தே, இது தொடர்பான உத்தரவை அரசு பிறப்பித்து இருந்தது. ஏற்கனவே, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், இதுபோன்ற தடை உத்தரவுகள் உள்ளன.
மத்திய அரசுக்கு சுருக்குமடி வலை பயன்படுத்துவதில், வேறு கருத்துக்கள் இருந்தாலும், இறுதியாக அது மாநில அரசின் கொள்கைகள் சார்ந்த விஷயம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, இது தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சுருக்குமடி வலை பயன்படுத்துவது என்பது, மாநில அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இந்த விவகாரத்தில் கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என, கேட்கத்தான் முடியுமே தவிர, திட்டவட்டமான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.
எனினும், இது தொடர்பான ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, ஏப்., 26ம் தேதி விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.